/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிதி மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க கோடீஸ்வரருக்கு 25 ஆண்டுகள் சிறை
/
நிதி மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க கோடீஸ்வரருக்கு 25 ஆண்டுகள் சிறை
நிதி மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க கோடீஸ்வரருக்கு 25 ஆண்டுகள் சிறை
நிதி மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க கோடீஸ்வரருக்கு 25 ஆண்டுகள் சிறை
ADDED : மார் 29, 2024 10:24 PM

புதுடில்லி:அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம், 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
உலகளவிலான கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களால், 'கிரிப்டோ கிங்' என செல்லமாக அழைக்கப்படுபவர், அமெரிக்காவைச் சேர்ந்த சாம் பேங்க்மேன் ப்ரைட். வாடிக்கையாளர்களின் நிதியை தவறாக பயன்படுத்தி, இழப்பை ஏற்படுத்தியதற்காக தற்போது 32 வயதாகும் இவருக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் எப்.டி.எக்ஸ்., எனும் கிரிப்டோ பரிமாற்ற தளத்தை சிறிய அளவில் ஏற்படுத்தி, வெகு விரைவில் உலகின் இரண்டாவது பெரிய தளமாக மாற்றியவர் சாம்.
இந்நிலையில், 2022ம் ஆண்டு நவம்பரில், கோடிக்கணக்கான டாலரை தன் ஹெட்ஜ் பண்டு நிறுவனமான, 'அலமேடா ரிசர்ச்' நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக, இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, எப்.டி.எக்ஸ்., நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி எடுக்கத் துவங்கினர்; பின்னர் நிறுவனமும் திவாலானது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி மோசடியாகக் கருதப்படும் எப்.டி.எக்ஸ்., மோசடியில், சாம் பேங்க்மேன் குற்றவாளி என, அமெரிக்க நடுவர் நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் கண்டறிந்தது. இந்நிலையில், இதற்கான தண்டனை அறிவிப்பை, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. வாடிக்கையாளர்களிடமிருந்து, 8 பில்லியன் டாலர், அதாவது 66,400 கோடி ரூபாயை அபகரித்த காரணத்திற்காக, அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனையை வழங்கிய நீதிபதி லுாயிஸ் கப்லான், ''சாம் பேங்க்மேனின் செயல்பாடுகளால் எப்.டி.எக்ஸ்., நிறுவன வாடிக்கையாளர்கள், 66,400 கோடி ரூபாயையும்; நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் 14,000 கோடி ரூபாயையும்; அவரின் ஹெட்ஜ் பண்டு நிறுவனமான அலமேடா ரிசர்ச் நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்கள் 10,700 கோடி ரூபாயையும் இழந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பித் தருவதாக அவர் கூறுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. தான் திருடிய பணத்தை வைத்து சூதாட்டம் ஆடிய ஒருவர், அதை திருப்பித் தருவதாகக் கூறினால், அதற்காக அவருக்கு தண்டனை குறைக்கப்படாது என தெரிவித்து உள்ளார்.
சாம் மேல்முறையீட்டுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

