/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (8)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (8)
ADDED : செப் 16, 2024 01:41 PM

ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர்.அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
எண்ணெய் வர்த்தகத்தில் எண்ணிலடங்கா சிக்கல்
தீப எண்ணெய்களை இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும். ஒன்றுக்கு 5 சதவீதமும், மற்றொன்றுக்கு 12 சதவீதமும் விதிக்கலாம்.
* ரீபைண்டு ரைஸ்பிரான் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ரீபைண்டு பாம்ஓலின் எண்ணெய், ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய், இலுப்ப எண்ணெய், புங்க எண்ணெய் வகைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., என்பதால், இவைகளைப் பயன்படுத்தி கூட்டு எண்ணெயாக தயாரிக்கப்படும் தீப எண்ணெய்க்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பதுதான் சரியானது.
இந்த எண்ணெய் வகைகளோடு, நெய் மற்றும் வாசனைத் திரவியங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் தீப எண்ணெய்க்கு மட்டும் 12 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கலாம். எண்ணெய்க்கு 5, நெய்க்கு 12, வாசனை திரவியத்துக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., என்பதால், சராசரியாக கணக்கிட்டு, 12 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கலாம்.
பழைய வரி நிலுவைக்கு சமாதான் திட்டம்
2017 ஜூலை 1க்குப் பிறகு, ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது. எனவே, தமிழ்நாடு வணிகவரித் துறையில் கடந்த காலங்களில் அமலில் இருந்த 10 வகையான சட்டங்களின் படி நிலுவையில்
இருக்கும் வரி பாக்கிகள், வழக்குகளுக்குத் தீர்வு காண 2011ல் செய்ததைப் போல, 'வரி பாக்கி ஒரு முறை தீர்வு' (சமாதான்) திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
சமாதான் திட்டத்தில், வரிபாக்கியில் 25 சதவீதம் மட்டுமே செலுத்தும்படி அறிவிக்க வேண்டும்.
* ஜி.எஸ்.டி., அமல் செய்யப்பட்ட முதல் 5 ஆண்டுகள், புரிதல் இல்லாமையாலும், அறியாமையாலும் பல தவறுகள் நடந்துள்ளன. எனவே, அந்த காலகட்டத்துக்கு வரி பாக்கி இருப்பின், வரி பாக்கியை மட்டும் வசூலித்து, அபராதம், வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
* நமது மாநில பகுப்பாய்வு அறிக்கைகளை எதிர்த்து, ரெபரல் லேபுக்கு மேல்முறையீடு செய்ய, ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உள்ளது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
- அருணாசலம்,
தலைவர், மதுரை ஆயில் மற்றும் ஆயில் சீட்ஸ் அசோசியேசன்
ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in

