கொண்டை கடலைக்கு இறக்குமதி வரி தமிழக வியாபாரிகள் வலியுறுத்தல்
கொண்டை கடலைக்கு இறக்குமதி வரி தமிழக வியாபாரிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 28, 2025 01:02 AM

சென்னை :உள்நாட்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொண்டைக் கடலைக்கு, 30 சதவீதம் இறக்குமதி வரி விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம் கூறியதாவது:
நம் நாட்டு விவசாயிகளால் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு, நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ஆண்டுதோறும் உயர்த்தி வருகிறது.
இதனால், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.
நாட்டில் பல மாநிலங்களில், கொண்டைக் கடலை விளைவிக்கப்படுகிறது. இந்த கொண்டைக் கடலை, கடலை பருப்பாகவும், மாவாகவும் மாற்றம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.
கொண்டைக் கடலை தற்போது, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், நம் நாட்டு விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாதத்தை விட, இம்மாதம் கொண்டைக் கடலை விலை, 100 கிலோ எடை உடைய குவின்டாலுக்கு, 600 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது, புதிய கடலை வரத்தின்போது, மேலும் விலை குறைந்து விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே, வரும் மார்ச் முதல் புதிதாக வர உள்ள கடலைக்கு, நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றால், இறக்குமதி செய்யப்படும் கொண்டைக் கடலைக்கு, 30 சதவீதம் இறக்குமதி வரி விதிக்குமாறு கேட்டு கொள்கிறோம். இதனால், உள்நாட்டு விவசாயிகள் பாதுகாக்கப்படுவதுடன், விலைவாசி குறைவதற்கோ, அதிகமாவதற்கோ வாய்ப்பு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

