சுற்றுலா மையங்களில் 'முகாம் தளம்' டெண்டர் கோருகிறது தமிழக அரசு
சுற்றுலா மையங்களில் 'முகாம் தளம்' டெண்டர் கோருகிறது தமிழக அரசு
ADDED : டிச 19, 2025 12:45 AM

சென்னை, டிச. 19-
ஏலகிரி, ஜவ்வாது மலை, வத்தல்மலை, கொல்லி மலை ஆகிய இடங்களில், 'முகாம் தளங்கள்' அமைத்து, பராமரித்து இயக்குவதற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பொது - தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ், சுற்றுலா பயணியர் இயற்கையோடு இணைந்து தங்கும் வகையில், முகாம் தளங்கள் அமைத்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி தனியார் ஒப்பந்த நிறுவனம் வழியே மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, இத்திட்டத்தின் கீழ், திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலை; திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை; தர்மபுரி மாவட்டம், வத்தல்மலை மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை ஆகிய இடங்களில், முகாம் தளங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள, தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதேபோல், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், சுற்றுலாத் துறை சார்பில் புது விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. ேலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதியில் செயல்படும், ஹோட்டல் தமிழ்நாடு விடுதியை மேம்படுத்தி, பராமரிக்கவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், டெண்டர் கோரப்பட்டு உள்ளன.
https://tntenders.gov.in என்ற இணைய தளத்தில், டெண்டர் விண்ணப்பங்களை பெற்று, ஜன.,19ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

