அவசரகால நிதியை உருவாக்கி பராமரிக்க தேவையான வழிமுறைகள்
அவசரகால நிதியை உருவாக்கி பராமரிக்க தேவையான வழிமுறைகள்
ADDED : ஆக 10, 2025 06:46 PM

மழைக்காலத்திற்கான சேமிப்பாக அமையும் அவசரகால நிதியை உருவாக்கி கொள்வதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகிறது. எதிர்பாராத நெருக்கடி ஏற்படும் போது அடிப்படை செலவுகளை சமாளிக்க தேவையான தொகையை அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும்.
எந்த அளவு தொகை தேவை என்பது ஒருவரது வருமான நிலை மற்றும் வாழ்வியல் சார்ந்தது. பொதுவாக, ஆறு மாத செலவுகளுக்கான தொகை இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நிதியை உருவாக்கி பராமரிக்கும் வழிகளை பார்க்கலாம்.
யாருக்கு தேவை:
அவசரகால நிதி எல்லோருக்கும் அவசியம். அதிலும் குறிப்பாக, சுய தொழில் செய்பவர்கள், வேலை பாதுகாப்பு குறைவாக உள்ளவர்கள் போன்ற பிரிவினருக்கு மிகவும் அவசியம். இத்தகைய நிதி கையில் இருந்தால், பணி இழப்பு அல்லது மருத்துவ செலவு போன்றவற்றை சமாளிக்கலாம்.
தொகை அளவு:
அவரவர் நிதி சூழலுக்கு ஏற்ற தொகை அவசரகால நிதியாக இருக்க வேண்டும். மூன்று முதல் ஆறு மாத அத்தியாவசிய செலவுகளை சமாளிக்கும் அளவு இந்த தொகை இருப்பது நலம். இந்த நிதியை, பாதுகாப்பாகவும், பணமாக்கல் கொண்டதாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
சேமிப்பு கணக்கு:
அவசரகால நிதியை சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதில் தவறில்லை என்றாலும், முழுத்தொகையையும் சேமிப்பு கணக்கில் வைத்திருக்க கூடாது. ஒரு மாத செலவிற்கான தொகையை சேமிப்பு கணக்கிலும், எஞ்சிய தொகையை லிக்விட் பண்டு உள்ளிட்ட சாதனங்களில் வைத்திருக்கலாம்.
சீரான சேமிப்பு:
அவசரகால நிதியை உருவாக்கிக் கொள்ள தொடர் வைப்பு நிதி அல்லது மாந்தாந்திர எஸ்.ஐ.பி., முறையை நாடலாம். பொருத்தமான லிக்விட் பண்டில், எஸ்.ஐ.பி., முறையில் சேமித்து வரலாம். எவ்வளவு தொகை தேவை என கணக்கிட்டு, படிப்படியாக சேமித்து உருவாக்கலாம்.
கண்காணிப்பு:
அவசரகால நிதியை முறையாக பராமரிப்பது அவசியம். அவசர தேவைக்காக இந்த நிதியில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நிதி சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பணவீக்கத்தின் பாதிப்பை கணக்கில் கொள்ள வேண்டும். கூடுதல் நிதி சேர்ந்தால் அதை வழக்கமான முதலீட்டிற்கு மாற்றலாம்.

