பெருநிறுவனங்களை போல் கட்டண வசூல் தமிழக அரசு மீது சிறுதொழில் சங்கம் அதிருப்தி
பெருநிறுவனங்களை போல் கட்டண வசூல் தமிழக அரசு மீது சிறுதொழில் சங்கம் அதிருப்தி
ADDED : செப் 10, 2025 11:44 PM

சென்னை:பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, சிறு நிறுவனங்களிடம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டணம் வசூலிப்பது, சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், அவற்றின் முதலீடு மற்றும் விற்றுமுதல் அளவை பொறுத்து, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கான அளவுகோலை, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, 2.50 கோடி ரூபாய் வரை முதலீடும், 10 கோடி ரூபாய் வரை விற்றுமுதலும் உடையவை குறுந்தொழில் பிரிவிலும்; 25 கோடி ரூபாய் வரை முதலீடு, 100 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உடையவை, சிறு தொழில் பிரிவிலும்; 125 கோடி ரூபாய் வரை முதலீடு, 500 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உடையவை, நடுத்தர தொழில் பிரிவிலும் இடம்பெறுகின்றன.
ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பல ஆண்டுகளுக்கு முன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிர்ணயித்த முதலீட்டு அளவில், கட்டணம் வசூலிப்பதாகவும், இதனால், பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தினர் கூறியதாவது:
தமிழகத்தில் ஒவ்வொரு தொழிலிலும், அதில் இருந்து வெளியேறும் மாசு அளவை பொறுத்து, 'சிகப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை' என, நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி, அதிக மாசு ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள் சிகப்பு வகையிலும், நடுத்தர மாசு ஏற்படுத்தும் தொழில் ஆரஞ்சு, குறைந்த மாசு ஏற்படுத்தும் தொழில் பச்சை, மிக குறைவாக மாசு ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள் வெள்ளை வகையில் இடம்பெறுகின்றன.
சிகப்பு, ஆரஞ்சு, பச்சை வகையில் இடம்பெறும் தொழில் துவங்குவோர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், 'நிறுவுவதற்கான அனுமதி' பெற வேண்டும்.
பின், அதில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆலை அமைத்திருப்பதை உறுதி செய்ய, ஆலையை இயக்குவதற்கு முன், 'இயக்குதலுக்கான அனுமதி' பெற வேண்டும். இதற்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, கட்டணம் செலுத்தப்படுகிறது.
நிறுவனத்தின் மொத்த நிலையான சொத்து மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் வரையான அடிப்படையில், சிகப்பு பிரிவுக்கு, 400 ரூபாய், ஆரஞ்சு பிரிவுக்கு, 300 ரூபாய், பச்சை பிரிவுக்கு, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதேபோல், சொத்து மதிப்பு மற்றும் தொழில் வகைப்பாட்டுக்கு ஏற்ப, தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தனி கட்டணமும், பெரிய நிறுவனங்களுக்கு தனி கட்டணமும் வசூலிக்க வேண்டும். சொத்து மதிப்பில், மனை மற்றும் கட்டட மதிப்பை சேர்க்க கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக தொழில்முனைவோர் புகார்.