ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் கூடுதல் அவகாசம் பெற்ற ரிலையன்ஸ்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் கூடுதல் அவகாசம் பெற்ற ரிலையன்ஸ்
ADDED : டிச 25, 2025 01:12 AM

புதுடில்லி: ரிலையன்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனமான ரோஸ் நெப்டிடம் இருந்து, கச்சா எண்ணெய் வாங்க கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், விபரமறிந்த வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
ரஷ்யாவை சேர்ந்த ரோஸ்நெப்ட், லுகோயில் ஆகிய நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நவம்பர் 21ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இதனால், ரோஸ்நெப்ட் நிறுவனத்துடன் நாளொன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் எண்ணெய் கொள்முதல் செய்ய நீண்டகால ஒப்பந்தம் செய்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. தினசரி 14 லட்சம் பீப்பாய் அளவுக்கு சுத்திகரிக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரிலையன்ஸ் நடத்தி வருகிறது.
நவம்பர் 22 முதல் ரிலையன்ஸ் நிறுவனம், ரோஸ்நெப்ட் நிறுவனத்திடம் இருந்து 15 தடவை எண்ணெய் இறக்குமதி செய்ததாக கெப்ளர் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
''ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி தான் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள், வர்த்தக தடையை முழுமையாகப் பின்பற்றுகிறோம்” என்று ரிலையன்ஸ் கூறியுள்ளது.
புதிதாக எண்ணெய் வாங்கவில்லை எனவும், வாங்கப்பட்ட எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

