'அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்'
'அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்'
ADDED : பிப் 28, 2024 12:36 AM

புதுடில்லி:தேர்தலுக்குப் பின், மூன்றாவது முறையாக நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதில் கவனம் செலுத்தவுள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியாவை, மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களை எடுத்துக்கூறியபோது, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறப்பு மையங்கள்
இதுகுறித்து, தொழில்துறையினரிடையே உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது:
மத்தியில் பா.ஜ., அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பின், நிலம், தொழிலாளர் சக்தி, மூலதனம், தொழில் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற அனைத்து உற்பத்திக் காரணி களிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, கிடங்கு மற்றும் சரக்கு கையாளுகை, விவசாய மதிப்பு கூட்டல் மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் பயன்படுத்தப்படாத பெரும் திறனைக் கொண்டிருக்கின்றன. இவற்றை பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதன் அடிப்படையிலேயே, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையங்கள் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது.
நாட்டில் கிடங்குகளுக்கான தேவை விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், செமிகண்டக்டர் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்றவற்றுக்கும் அதிகரித்துள்ளது.
சரக்கு கையாளுகையின் முழு திறன் இன்னும் பயன்படுத்தப்படாத நிலையில், அதை விரிவுபடுத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
அதிவேக முன்னேற்றம்
தொழில்துறையினர் அதிவேகமாக முன்னேறி, தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் சிறந்த வாய்ப்புகளைப் பார்ப்பதால் தான், உலகளவில் முதலீடுகள் நம் நாட்டை நோக்கி வருகின்றன.
இதைப் பற்றி அறிந்துள்ள நம் நாட்டு தொழில்துறையினர், உலகளவில் இணைந்து செயல்படும் வகையில் கூட்டாண்மைக்கு முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் இருப்பதை பார்ப்பதால் தான், உலகளவில் முதலீடுகள் நம் நாட்டை நோக்கி வருகின்றன.

