ADDED : செப் 26, 2024 02:44 AM

சென்னை:'சிப்' தயாரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக, அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக, 'ஜோஹோ' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, 'ஜோஹோலிக்ஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் பயனர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.
இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் இந்த மாநாடு குறித்து, நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடையும் வகையில், ஓ.என்.டி.சி., தளத்திற்காக 'விக்ரா' எனப்படும் விற்பனையாளர் செயலி குறித்து விளக்கப்பட்டது.
மேலும், வணிக நிறுவனங்கள் இணையத்தில் தங்களது தகவல்களை பரிமாறிக்கொள்ள, குறைந்த குறியீடுகள் கொண்ட தளங்களை கட்டமைக்கும் வசதியையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்ததாவது:
சிப் ஆலை அமைப்பது தொடர்பாக, அரசிடம் விண்ணப்பித்து உள்ளோம். தற்போது விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. சிப் ஆலையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், அதன் நம்பகத்தன்மை உள்ளிட்டவை குறித்து, அரசு விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும்.
இதில் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, தொழில்நுட்பம், சந்தையின் தாக்கம் போன்றவை இடம்பெற்றுள்ளதால், மிகவும் முழுமையான முக்கியமான மதிப்பீடாகும். இவை சிக்கலான தொழில்நுட்பங்கள் என்பதால், அதற்கு குறிப்பிட்ட காலம் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

