'செமிகண்டக்டர் எனும் தேரை இழுத்து செல்வதில் தமிழகம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்' ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி
'செமிகண்டக்டர் எனும் தேரை இழுத்து செல்வதில் தமிழகம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்' ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி
UPDATED : செப் 15, 2025 10:33 AM
ADDED : செப் 14, 2025 11:13 PM

தமிழக அரசு, 'தமிழக செமிகண்டக்டர் இயக்கம் 2030' எனும் ஐந்து ஆண்டு விரிவான திட்டத்தை, கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்காக தற்போது, 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி அளித்த பிரத்யேக பேட்டி:
செமிகண்டக்டர் என்பது ஒரு நுட்பமான தொழில். அதை நிறுவ வேண்டும் எனில், இரு அம்சங்கள் தேவை. ஒன்று திறன்வாய்ந்த மனித வளம். இரண்டாவது, இந்தத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊக்கம். மொத்தமாக முதலீடு செய்து, இந்த நிறுவனத்தை உருவாக்க முடியாது. இந்தத் துறையில் ஈடுபடுபவர்கள் சிரமப்படும் போது, அரசு உதவிகளை செய்து கை துாக்கிவிட வேண்டும்.
இந்த துறைக்காக தனியே ஒரு கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
அரசு ஒரு தொழிற்சாலையை உருவாக்கி, 'சிப்' தானே உற்பத்தி செய்து தர முடியாது. அரசு கொள்கை வகுக்கும். அதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட துறையில் சிரமப்படக் கூடிய நிறுவனங்களுக்கு உதவி செய்யும். உதாரணமாக, வெளிநாட்டில் இருந்து முதலீடு வருகிறது; இங்கே தொழில் துவங்க வேண்டும் என்று சொல்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம்.
அவர்களுக்கு நாம் என்ன சொல்ல வேண்டும் என்றால், 'செமிகண்டக்டருக்கு என்று எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் இந்த வகைகளில் எல்லாம் ஊக்குவிக்கிறோம்.
இதனால் உங்களுக்கு பிசினஸ் கிடைக்கும், அதற்கேற்றார் போல் ஒரு சந்தையை உருவாக்கி இருக்கிறோம். இங்கே வந்து, 'பேப்ரிக்கேஷன் யூனிட்' அமைத்தால், அது நன்கு இயங்கும்” என்று சொல்ல வேண்டும்.
அதாவது, 'பேப்ரிகேஷன் யூனிட்' நிறுவ, உகந்த சூழலை நாம் உருவாக்க ஒரு கொள்கை அவசியம். அந்த வகையில், தமிழக அரசு இந்த முதல் முயற்சியை துவக்கி இருக்கிறது.
நீங்கள் என்ன பயிற்சி தர உள்ளீர்கள்?
ஒரு பேப்ரிகேஷன் என்றால், அதில் என்னவெல்லாம் இருக்கும், எப்படி இயங்கும் என்று சொல்லித் தர வேண்டும். நாங்கள் ஐ.ஐ.டி.,யில் இதற்காக நான்கு வாரம் முதல் ஆறு மாதம் வரை பல்வேறு வகையான பயிற்சி கொடுக்கப் போகிறோம். 'நான் முதல்வன்' திட்டத்தோடு இணைந்து, முதல் பேட்ச்சில், 2,000, 3,000 பேருக்கு பயிற்சி அளிக்க போகிறோம். இவர்கள் எல்லோரும் இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் போய் வேலை செய்ய பயிற்சி பெறுவர்.
இந்த துறையில் தமிழகத்தின் பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது?
செமிகண்டக்டர் உற்பத்தி என்பது உண்மையில் ஊர் கூடி இழுக்கும் தேர். இந்தத் தேரை இந்தியா முழுதும் உள்ள எல்லா மாநிலங்களும் சேர்ந்து இழுக்க வேண்டும். அதில் நம் தமிழகம் இன்னும் திறனோடு இழுக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறோம்.
அடுத்த ஒன்று, ஒன்றரை ஆண்டுகளில் நாம் பிரமாண்டமான மாற்றங்களை பார்க்கப் போகிறோம். குறிப்பாக, செமிகண்டக்டர் எனும் தேரை இழுத்துச் செல்வதில் தமிழகம் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்யப் போகிறது.