கைவினை பொருட்கள் ஏற்றுமதி நவம்பரில் 36 சதவீதம் உயர்வு
கைவினை பொருட்கள் ஏற்றுமதி நவம்பரில் 36 சதவீதம் உயர்வு
ADDED : டிச 27, 2025 01:11 AM

திருப்பூர்: இந்தியாவில், கைவினை பொருட்கள் ஏற்றுமதி, கடந்த மாதம், 1,325 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 36 சதவீதம் அதிகம் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எளிதாக கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு கைகளால் உருவாக்கப்படும் பொருட்களுக்கு, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு கிடைக்கிறது.
மர வேலைப்பாடு, பீங்கான் பொருட்கள், மண்ணில் தயாரிக்கப்படும் கலைப்பொருட்கள், அலங்கார ஓவியங்கள், பொம்மை வகைகள், பனை ஓலையில் தயாரிக்கப்படும் தொப்பி என, ஏராளமான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
நம் நாட்டில் இருந்து, மாதம், 800 முதல் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கைவினை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த நவம்பரில், 36 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதாவது, 2024 நவ., மாதம், 970 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்த நிலையில், இந்தாண்டு நவ., மாதம், 1,325 கோடி ரூபாய் அளவுக்கு, கைவினை பொருட்கள் ஏற்றுமதி நடந்து உள்ளது.
கடந்த நிதியாண்டில், ஏப்., முதல் நவ., வரையிலான எட்டு மாதங்களில், 10,073 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி நடந்தது. இதேபோல், கடந்த 2024 நவம்பரில், 1,035 கோடி ரூபாயாக இருந்த கம்பளம் ஏற்றுமதி, கடந்த மாதம், 1,065 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், 'வெளிநாடுகளில், இந்திய கைவினை பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது.
குறிப்பாக, பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்களை விரும்பி வாங்குகின்றனர்; மாதாமாதம், கைவினை பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து நடந்து வருகிறது; ஒரே மாதத்தில், 36 சதவீதம் அதிகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.
மாதம் சராசரியாக, 800 முதல் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ைவினை பொருட்கள் ஏற்றுமதி
2024 நவம்பரில் 970 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி; 2025 நவ., மாதம், 1,325 கோடி ரூபாயாக உயர்வு.

