ADDED : செப் 29, 2024 02:14 AM

திருப்பூர்:திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், ஆயத்த ஆடை தொழில்துறைக்கான ஏற்றுமதி நிதி மற்றும் வர்த்தக வசதி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது.
இதில் கலந்துகொண்டு, மத்திய வர்த்தகத்துறை அமைச்சரகத்தின், வெளிநாட்டு வர்த்தக பிரிவு இணை இயக்குனர் ஆனந்த்மோகன் மிஸ்ரா பேசியதாவது:நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக வளர்ச்சி, பிரகாசமாக இருக்கிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தால், புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும், 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம், 83.72 லட்சம் கோடி ரூபாயாக உயரும்; அதற்காக, இலக்கு நிர்ணயம் செய்து, பணிகளை செய்து வருகிறோம்.
ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியில், ஜவுளித்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. 'டிஜிட்டல்' தொழில்நுட்ப வளர்ச்சியால், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி வாயிலாக, வர்த்தக மதிப்பை உயர்த்தலாம்; வர்த்தகத்தை மிக வலுவாக கட்டமைக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

