'ஜெட் என்ஜின்' வழங்குவதில் தாமதம்: 'ஜெனரல் எலக்ட்ரிக்' மீது நடவடிக்கை?
'ஜெட் என்ஜின்' வழங்குவதில் தாமதம்: 'ஜெனரல் எலக்ட்ரிக்' மீது நடவடிக்கை?
ADDED : நவ 01, 2024 07:18 AM

புதுடில்லி: அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துக்கும் இந்தியாவின் 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, கடந்தாண்டு துவங்கி 99 'எப் 404' என்ஜின்களை ஜெனரல் எலக்ட்ரிக், ஹிந்துஸ்தான் எரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். இந்திய விமானப்படையின் தேஜாஸ் 'எம்.கே., 1' இலகுரக விமானங்களில் இந்த என்ஜின்கள் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், தற்போது வரை இதன் வினியோகம் துவங்கவில்லை. இதனை வழங்குவதற்கான காலக்கெடுவை நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதையடுத்து காலக்கெடுவை பின்பற்றாமல் தாமதப்படுத்துவதால், இந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அபராதம் விதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது ஜெட் என்ஜின்களின் வினியோக தொடரில் பணியாற்றி வரும் 15 வெவ்வேறு வினியோகஸ்தர்களால், உலகளவில் ஜெட் என்ஜின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் போர் விமானங்களில், நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் விமானங்கள் நீக்கப்படுவதால், நாட்டின் போர் விமானங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல், அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் உடனான உறவில் பதட்டமான சூழலே நிலவுவதால், அதனை கருத்தில் கொண்டு, உள்நாட்டில் போர் விமானங்களை தயாரிக்க இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

