கோவையில் நகை தொழில் பூங்கா: ஆய்வை துவங்கிய ஒப்பந்த நிறுவனம்
கோவையில் நகை தொழில் பூங்கா: ஆய்வை துவங்கிய ஒப்பந்த நிறுவனம்
ADDED : பிப் 18, 2025 09:36 AM

சென்னை:
கோவையில், தங்க நகை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெற, 126 கோடி ரூபாயில் நகை தொழில் பூங்கா அமைக்க, தொழில்நுட்ப ஆலோசனை பணியை ஆர்.டி.எக்ஸ்., ஆர்க்கிடெக் நிறுவனம் வாயிலாக, 'சிட்கோ' துவக்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில், தங்க நகை தயாரிப்பில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதன்படி, 25,000க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் வாயிலாக, 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைத்துள்ளது. கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாதுகாப்பு உள்ளிட்ட போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், கோவையில் உள்ள நகை தொழில் நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. அவற்றின் கோரிக்கையை ஏற்று, அம்மாவட்டத்தில், 126 கோடி ரூபாய் செலவில் நகை தொழில் பூங்கா அமைக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து, குறிச்சி தொழிற்பேட்டையில், 3.41 ஏக்கரில் நகை தொழில் பூங்கா அமைக்க, 'சிட்கோ' முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் பணி, ஆர்.டி.எக்ஸ்., ஆர்க்கிடெக் நிறுவனம் வாயிலாக துவங்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், தொழில்முனைவோரின் தேவைகளை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப நகை தொழில் பூங்கா அமைக்க வடிவமைப்பு விபரங்களுடன் தொழில்நுட்ப அறிக்கையை, சிட்கோவுக்கு சமர்ப்பிக்கும்.
இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகை தொழில் நிறுவனங்களுக்கு, 'லாக்கர்' எனப்படும் பாதுகாப்பு பெட்டக வசதியுடன், முதல் கட்டமாக, 200 தொழிற்கூடங்களை உள்ளடக்கிய தொழில் பூங்கா கட்ட, திட்டமிடப்பட்டு உள்ளது.
கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோருவது முதல், கட்டுமான பணி துவங்கும் வரை தேவைப்படும் தொழில்நுட்ப ஆலோசனையை ஆர்.டி.எக்ஸ்., நிறுவனம் வழங்கும். அதற்கு ஏற்ப, விரைவில் பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் 126 கோடி ரூபாய் செலவில் நகை தொழில் பூங்கா அமைக்க திட்டம்
தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் பணியை துவங்கிய, ஆர்.டி.எக்ஸ்., ஆர்க்கிடெக் நிறுவனம்
முதல் கட்டமாக 'லாக்கர்' எனப்படும் பாதுகாப்பு பெட்டக வசதியுடன் 200 தொழிற்கூடங்கள்

