'கோட்டக்' இடத்தை பிடித்த 'ஆக்சிஸ்' சந்தை மதிப்பில் நான்காவது இடம்
'கோட்டக்' இடத்தை பிடித்த 'ஆக்சிஸ்' சந்தை மதிப்பில் நான்காவது இடம்
ADDED : ஏப் 26, 2024 01:38 AM

புதுடில்லி:அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகளின் பட்டியலில், 'கோட்டக் மஹிந்திரா' வங்கியை பின்னுக்குத் தள்ளி 'ஆக்சிஸ் பேங்க்' நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஆக்சிஸ் வங்கியின் கடந்த நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு முடிவுகள், எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருந்த காரணத்தால், நேற்று பங்கு சந்தையில், வங்கியின் பங்கு விலை 6 சதவீதம் அதிகரித்தது.
அதே நேரம், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் குறைபாடுகள் காரணமாக, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், கோட்டக் வங்கியின் பங்கு விலை, 10 சதவீதத்துக்கும் மேலாக சரிந்தது.
இதன் காரணமாக கோட்டக் வங்கியின் சந்தை மதிப்பு 3.27 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தும்; ஆக்சிஸ் வங்கியின் சந்தை மதிப்பு 3.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தும் உள்ளது.
இதையடுத்து, அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில், கோட்டக் மஹிந்திரா வங்கியை பின்னுக்குத் தள்ளி, ஆக்சிஸ் வங்கி, நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
'எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ.,' ஆகிய மூன்று வங்கிகளும் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
கோட்டக் வங்கியும், ஆக்சிஸ் வங்கியும் சமீபகாலமாக போட்டியாளர்களாகவே இருந்து வருகின்றன. எனினும் சந்தை மதிப்பில் கோட்டக் வங்கியே முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், கோட்டக் வங்கியின் நிர்வாகத்திலிருந்து உதய் கோட்டக் கடந்தாண்டு விலகிய நிலையில், அடுத்து யார் வங்கியை வழி நடத்துவர் என்ற கவலை முதலீட்டாளர்களிடையே எழுந்ததால், வங்கியின் பங்கு விலை சரியத் துவங்கியது.
இதுபோக, ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம், ஆன்லைன் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் வங்கிக்கு தடை விதித்ததால், பங்கு விலை மேலும் சரிந்துள்ளது.
கோட்டக் வங்கி, ஆன்லைன் வாயிலாகவே பல்வேறு சேவைகளை வழங்கி வந்த நிலையில், இந்த தடை வங்கியின் வளர்ச்சியையும், லாபத்தையும் பாதிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த பிரச்னைகளை விரைவில் சரி செய்யவில்லை என்றால், அது வங்கியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது எழுந்துள்ள பிரச்னைகளை நிவர்த்தி செய்வது குறித்து, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக, கோட்டக் வங்கி தெரிவித்துள்ளது.

