/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கிரெடிட் கார்டு மூலம் அதிக பலன் பெறும் வழிகள்
/
கிரெடிட் கார்டு மூலம் அதிக பலன் பெறும் வழிகள்
ADDED : பிப் 26, 2024 12:19 AM

அன்றாட செலவுகள் உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகளை கிரெடிட் கார்டு வாயிலாக மேற்கொள்வதன் மூலம் பலவிதமான பலன்களை பெறலாம்.
கிரெடிட் கார்டை பலவிதமாக பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படும் விதத்திற்கு ஏற்ப அதன் மூலம் சாதகமான பலன் பெறலாம் அல்லது பாதகமான விளைவுகளும் உண்டாகலாம். அந்த வகையில் கிரெடிட் கார்டை திட்டமிட்டு கவனமாக பயன்படுத்த வேண்டும்.
பெரிய அளவிலான பொருட்களை வாங்குவதில் கிரெடிட் கார்டு ஒருவிதமாக உதவும் என்றால், அன்றாட செலவுகளையும் கிரெடிட் கார்டு மூலம் செய்வது இன்னொருவிதமாக பலன் அளிக்கும். வழக்கமாக மேற்கொள்ளும் செலவுகள் உள்ளிட்ட நிதி செயல்பாடுகளை கிரெடிட் கார்டு மூலம் நிர்வகிப்பது, கார்டு மூலமான பலன்களையும் அதிகரிக்க வழி செய்யும்.
பரிசுப்புள்ளிகள்
கிரெடி கார்டு பண பரிவர்த்தனையை எளிதாக்குவதோடு, கேஷ்பேக் மற்றும் பரிசுப்புள்ளி சலுகைகளை அளிக்கின்றன. பல்வேறு கார்டுகள் பலவிதமான சலுகைகளை கொண்டுள்ளன. பல கார்டு நிறுவனங்கள், பெட்ரோல், மளிகை பொருட்கள், மாதாந்திர பில்களை கார்டு மூலம் செய்யும் போது கேஷ்பேக் சலுகை அளிக்கின்றன.
மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பரிசுப்புள்ளிகளையும் தருகின்றன. ஆக வழக்கமான செலவுகளை கார்டு வாயிலாக மேற்கொள்ளும் போது கேஷ்பேக் மற்றும் பரிசுப்புள்ளிகள் சேமிப்பாக அமையும். செலவுகள் மீதான கூடுதல் அனுகூலமாக இது அமையும்.
வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து கார்டு நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகளையும் அளிக்கின்றன. ரெஸ்டாரன்டில் சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது, பொழுதுபோக்கு வசதி என பல இடங்களில் இத்தகைய தள்ளுபடிகள் வழங்கப்படலாம். கார்டு பயன்பாட்டிற்கு ஏற்ப இவையும் சேமிப்பாக அமையும்.
இதன் மூலம் அன்றாட செலவுகள் மீதான சுமையும் ஓரளவு குறையும் வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக, தேவைகளுக்கு ஏற்ப கார்டை தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் பலன் பெறலாம்.
நிதி ஆரோக்கியம்
கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துவது நிதி ஒழுக்கத்தை உண்டாக்கும். பில்களை உரிய காலத்தில் செலுத்துவது முக்கியம். இதை தொடர்ந்து பின்பற்றுவது நிதி ஆரோக்கியத்தை அதிகமாக்கும். மேலும் கிரெடிடை அதன் வரம்புகள் உணர்ந்து பயன்படுத்துவது, கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும்.
கடன் தகுதியை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றான கிரெடிட் ஸ்கோரில், கடன் தவணை மற்றும் வாங்கிய பணத்தை உரிய காலத்தில் திரும்பி செலுத்துவது முக்கியமாக அமைகிறது. பொறுப்பான முறையில் கார்டை பயன்படுத்தினால், கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும்.
மேலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எளிதானது. பயண ஏற்பாடு, டிக்கெட் முன் பதிவு, இ- - காமர்ஸ் போன்றவற்றுக்கு கார்டை பயன்படுத்துவது வசதியானது. கார்டு பயன்பாடு மூலம் பரிவர்த்தனைகளை திட்டமிடலாம். கார்டு பயன்பாட்டில் வட்டியில்லா காலத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவசர தேவை எனிலும் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். எனினும், தவிர்க்க இயலாத அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். முக்கியமாக, கார்டு பயன்பாடு தொடர்பான அறிக்கை மூலம் செலவுகளை தொடர்ந்து கண்காணித்து வரலாம். இது செலவுகளை கட்டுப்படுத்தி, மாதாந்திர பட்ஜெட்டை பின்பற்ற உதவும்.

