/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவின் கோவில் நகர ம் உடுப்பி
/
கர்நாடகாவின் கோவில் நகர ம் உடுப்பி
ADDED : டிச 30, 2025 06:40 AM

கர்நாடகாவின் கடலோர மாவட்டம் உடுப்பி. இங்கு கடலுக்கும், பக்திக்கும் எந்த குறையும் இல்லை. அந்த அளவுக்கு பல கோவில்கள் காணப்படுகின்றன. இதனாலே, உடுப்பி கர்நாடகாவின் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
கடற்கரை மண்ணில் பக்தி, பண்பாடு போன்றவை கலந்து திகழும் ஒரு சிறிய நகரமே உடுப்பி. 'கோவில் நகரம்' என அழைக்கப்படும், இந்த ஊரின் ஒவ்வொரு தெருவும், ஆன்மிக வாசனையுடன் நிறைந்திருக்கிறது. காலையில் கோவில் மணி ஓசையை கேட்டு துாக்கத்திலிருந்து எழலாம்.
ஆன்மிக இதயம் இப்படிப்பட்ட உடுப்பியில் முக்கியமான ஆன்மிக தலங்களில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ணர் மடம். இது, 13ம் நுாற்றாண்டில் நிறுவப்பட்டது. உடுப்பியின் ஆன்மிக இதயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் இறைவனை ஜன்னல் வழியாக வழிபட வேண்டும். இது போன்ற வழிபாடு, மற்ற கோவில்களில் கிடையாது. இதுவே, இதன் மிகப்பெரிய சிறப்பாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர் வழிபாடு, பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர்.
உடுப்பியில் புகழ்பெற்ற ஸ்ரீ அனந்தேஸ்வரர் கோவில் உள்ளது. இது, மிகவும் பழமையான சிவன் கோவில். இந்த கோவிலுக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு இடையில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சைவம், வைணம் போன்றவற்றுக்கு இடையேயான பந்தம் தெரிகிறது.
அனேந்தஸ்வரா கோவிலுக்கு அருகே உள்ளது சந்திரமவுலீஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவில் கட்டட கலைக்கு பெயர் பெற்றது. இந்த கோவிலில் சாளுக்கியர்களின் கட்டட கலையை காண்பதற்காகவே வெளிநாட்டினர் வருகை தருகின்றனர்.
உணவே இறைவன் உடுப்பியின் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று கொல்லுார் மூகாம்பிகை கோவில். மூகாம்பிகை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட தேவியின் சிலையை வழிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
மேலும் உடுப்பி கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிருஷ்ண மடத்தில் தினமும் வழங்கப்படும் அன்னதானம், உணவே இறைவன் என்பதை உணர்த்துகிறது. சாதாரண உணவிலும் ஆன்மிக புனிதம் ஊற்றப்படும் இடமே உடுப்பி.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இங்கு ஆன்மிகம் என்பது கோவிலுக்குள் மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் கலந்த ஒன்றாகும். எளிய வாழ்க்கை, ஒழுக்கம், இறை நம்பிக்கை ஆகியவை, இங்கு வாழ்பவர்கள் பின்பற்றும் விஷயமாக உள்ளது.
இதனாலே, உடுப்பியை கர்நாடகாவின் கோவில் நகரம் என்று அழைக்கின்றனர்
- நமது நிருபர் -: .

