/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முல்லையன கிரியில் புலி நடமாட்டம்
/
முல்லையன கிரியில் புலி நடமாட்டம்
ADDED : டிச 13, 2025 06:51 AM
சிக்கமகளூரு: 'முல்லையனகிரி மலையில், புலி நடமாட்டம் தென்படுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணியர் கவனமாக இருக்க வேண்டும்' என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான முல்லையன கிரி மலைப்பகுதி சுற்றுப்பகுதியில் உள்ள, பாரதீபைலு, பி.ஹொசள்ளி கிராமத்தில் சில நாட்களுக்கு முன், புலி நடமாட்டம் காணப்பட்டது.
சுற்றுப்புற கிராமங்களின் பசுக்களை தாக்கின. இது குறித்து, கிராமத்தினர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர்களும் கிராமத்தின் சுற்றுப்புறங்களில் புலி நடமாட்டம் உள்ளதா என, தேடினர்.
புலியின் நடமாட்டத்தை அடையாளம் காண, பாரதீபைலு கிராமத்தின் அருகில் வனப்பகுதியில், 'டிராக்கிங் கேமரா' பொருத்தினர். இந்த கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
கிராமத்தின் வெகு அருகில் புலி நடமாடுவதால் கிராமத்தினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இரவில் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பகலிலும் தேவையின்றி தனியாக நடமாட வேண்டாம் என, அறிவுறுத்தி உள்ளனர்.
அதேபோன்று, முல்லையன கிரிக்கு செல்லும் சுற்றுலா பயணியரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலி தென்பட்டால் போட்டோ, வீடியோ எடுக்க முற்பட வேண்டாம், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

