/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிலத்தை அளவிட சர்வேயர்களுக்கு 'ரோவர்' கருவி
/
நிலத்தை அளவிட சர்வேயர்களுக்கு 'ரோவர்' கருவி
ADDED : பிப் 20, 2025 06:46 AM

பெங்களூரு: ''நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'ரோவர்' சர்வே கருவி வழங்குவதால், 10 நிமிடங்களில் நிலத்தை சர்வே செய்து முடிக்கலாம்,'' என, மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.
பெங்களூரு சர்வே கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, 465 சர்வேயர்களுக்கு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நிலத்தை அளவிடும் 'ரோவர்' கருவிகளை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா வழங்கினார்.
சிவாஜி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உடனிருந்தார். பின், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அளித்த பேட்டி:
நவீன உலகத்தில் இன்னமும் நிலங்கள் அளவிட செயின்கள் வைத்து பயன்படுத்தப்படுகிறது. இதற்காக சர்வேயர், இரு உதவியாளர்கள் கொளுத்தும் வெயிலில் பணியாற்றுகின்றனர். ஒரு நிலத்தை அளவிட 70 நிமிடங்களும், அதை வரை படமாக்க மூன்று மணி நேரம் வீணாகிறது. இதை தவிர்க்கவே, இந்த ரோவர் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 10 நிமிடத்தில் நிலத்தை அளந்துவிடலாம்.
உலகம் பல முன்னேற்றங்கள் அடைந்து வரும்போதும், துறையின் பணி மட்டும் இன்னும் மாறவில்லை. எனவே ஊழியர்களுக்கு வேலை பளுவை அதிகரிக்காமல், விரைந்து முடிக்க இது உதவியாக இருக்கும்.
'செயின் சர்வே' பணியின்போது, சிலர் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருந்தன. இதனால் பலரும் இன்றும் நீதிமன்றம், சர்வே அலுவலகங்களுக்கு நடயாய் நடந்து கொண்டே இருக்கின்றனர். இனி, இத்தகைய நிலைக்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நில சர்வேயருக்கு புதிய ரோவர் கருவிகளை வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா வழங்கினார்.

