/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேகதாது அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை; ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா கருத்து
/
மேகதாது அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை; ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா கருத்து
மேகதாது அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை; ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா கருத்து
மேகதாது அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை; ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா கருத்து
ADDED : ஏப் 06, 2025 07:16 AM
பெங்களூரு: ''மேகதாது அணை கட்டுவதால், தமிழகத்துக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பெங்களூரு மக்களுக்கு உதவியாக இருக்கும்,'' என, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா தெரிவித்தார்.
காவிரி நதி பாதுகாப்பு கமிட்டி, பெங்களூரின் குவெம்பு கலாசேத்திராவில் 'நியாயமான நீர் உரிமைக்காக' என்ற பெயரில், நேற்று நடத்திய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
மேகதாது அணை கட்டுவதால், தமிழகத்துக்கு அநியாயம் நடக்காது. மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். காவிரி நதி பங்கீட்டில் நமக்கு சரியான பங்கு நீர் கிடைக்கவில்லை. நம்முடையது ஜனநாயக நாடாகும். உலகில் விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிப்பதற்கும் தண்ணீர் வேண்டும்.
தண்ணீர் மனிதரின் உரிமையாகும். காவிரி நீரில் தமிழகத்துக்கு 200 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. நமக்கு 100 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்துள்ளது. இங்கு சமமான நியாயம் எங்குள்ளது. நமக்கு அநியாயம் நடந்துள்ளது. நதி நீர் பங்கீட்டை மறு பரிசீலனை செய்யக்கோரி, கர்நாடக அரசு மனு அளிக்க வேண்டும்.
மக்கள்தொகை, விவசாய பகுதிகளின் பரப்பளவு அடிப்படையில், தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என, நாங்கள் பல முறை தீர்ப்பளித்துள்ளோம். கூட்டமைப்பு நடைமுறையில், நம் மாநிலத்தை வேறு விதமாக பார்ப்பது சரியல்ல. இரண்டு மாநிலங்களுக்கும், உச்ச நீதிமன்றம் சமமாக தண்ணீர் பகிர்ந்தளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது:
மைசூரு மஹாராஜா, தன்னிடம் இருந்த தங்கத்தை விற்று காவிரி ஆற்றுக்கு அணை கட்டினார். ஆனால் அதில் தண்ணீரை தக்கவைத்துக் கொள்ள, நம்மால் முடியவில்லை. நாம் சரியாக போராடவில்லை. அதிகாரிகள் அளவில் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
யாருக்கும் தெரியாமல், அணையில் இருந்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால், நாம் சோற்றுக்கு வட மாநிலங்களை நாட வேண்டி வரும். இது பற்றி சிந்திக்க வேண்டும்.
நாம் வெறும் மாநாடு நடத்தினால் போதாது. திட்டங்கள் வகுக்க வேண்டும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நிர்மலானந்தநாத சுவாமிகள், நதி நீரை காப்பாற்றும் சேவை செய்கிறார். அவருக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.
கெம்பேகவுடா காலத்தில் இருந்தே, கனகபுரா, தொட்டபல்லாபூர் உட்பட, பல்வேறு பகுதிகளின் விவசாயிகள், பெங்களூருக்கு வருகின்றனர்.
நமக்கு 25 டி.எம்.சி., தண்ணீர் வேண்டும். மாண்டியா, மைசூரு வளர்கிறது. அதை தடுக்க முடியாது. விவசாயத்துக்கு நீர் இல்லை. தமிழகத்தினர் நம்மை முந்தி கொண்டு, நீதிமன்றத்துக்கு சென்று அமர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசியதாவது:
அனைத்து மாநில நதி நீர் விவாதங்களில், நீதிமன்றங்கள் தவறு செய்துள்ளன. இதனால் நமக்கு அநியாயம் நடந்துள்ளது. வாழ்க்கை நடத்த நீர் முக்கியம். மாநிலத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என, ஆதிசுஞ்சன கிரி சுவாமிகள் வகுக்கும் பாதையில், நாம் செல்ல வேண்டும்.
நாம் மவுனமாக அமர்ந்திருக்கக் கூடாது. சிறு, சிறு தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை தேக்க வேண்டும். தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை, நாம் கற்க வேண்டும்.
கெம்பேகவுடா உருவாக்கிய பெங்களூரு, அனைவருக்கும் காமதேனுவாக விளங்குகிறது. மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும். இதனால் மூழ்கும் இடங்களுக்கு, மாற்று இடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காவிரி நீர் போராட்டங்களில், நம்மிடம் ஒற்றுமை இல்லை. ஒவ்வொன்றுக்கும் அரசியல் செய்கின்றனர். தண்ணீர் போராட்டம் என்றால், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒன்று சேர்கின்றன. அங்கு மாநில கட்சிகள் வலுவாக உள்ளன. இத்தகைய கட்சிகளுக்கு, மத்திய அரசும் முக்கியத்துவம் அளிக்கிறது. காவிரி நீர் விஷயத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால், சங்கடத்தை தவிர்க்க முடியாது.
- ஹெச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சர்

