/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஹாராஜாவின் 4,500 ஏக்கர் நிலத்துக்கு பட்டா கேட்டு பிரமோதா தேவி கடிதம்
/
மஹாராஜாவின் 4,500 ஏக்கர் நிலத்துக்கு பட்டா கேட்டு பிரமோதா தேவி கடிதம்
மஹாராஜாவின் 4,500 ஏக்கர் நிலத்துக்கு பட்டா கேட்டு பிரமோதா தேவி கடிதம்
மஹாராஜாவின் 4,500 ஏக்கர் நிலத்துக்கு பட்டா கேட்டு பிரமோதா தேவி கடிதம்
ADDED : ஏப் 08, 2025 05:22 AM

சாம்ராஜ் நகர்; அரச குடும்பத்துக்கு சொந்தமான, 4,500 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு பட்டா செய்து தரும்படி, மைசூரு அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மைசூரு அரச குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்து விஷயமாக மாநில அரசுக்கும், அரச குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது விவாதங்கள் நடக்கின்றன.
தற்போது அரச குடும்பத்தின் தனிப்பட்ட நிலத்தை, தன் பெயருக்கு பட்டா செய்து தரும்படி, சாமராஜ்நகர் மாவட்ட கலெக்டருக்கு, பிரமோதா தேவி உடையார் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதம்:
சாம்ராஜ்நகர் தாலுகாவின் பல்வேறு இடங்களில் உள்ள 4,500 ஏக்கருக்கும் அதிகமான நிலம், மைசூரு அரச குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாகும். இதை என் பெயருக்கு பட்டா செய்து கொடுக்க வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கூட்டமைப்பு நடைமுறைக்கு அரச குடும்பத்தினர் ஆதரவு அளித்திருந்தனர். அப்போது மைசூரு மஹாராஜா மற்றும் இந்திய அரசுக்கு இடையே நடந்த ஒப்பந்தப்படி, சாம்ராஜ்நகர் தாலுகாவில் உள்ள அந்த நிலம், மைசூரு மஹாராஜாவின் தனிப்பட்ட சொத்தாகும். இந்த நிலத்தை என் பெயருக்கு பட்டா செய்து தர வேண்டும். பட்டா என் பெயருக்கு ஆகும் வரை, சொத்து தொடர்பாக எந்த பரிமாற்றமும் நடக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக் அளித்த பேட்டி:
மஹாராஜாவுக்கு சொந்தமான, தனிப்பட்ட சொத்துகளை தன் பெயருக்கு பட்டா செய்து தரும்படி, மைசூரு அரச குடும்பத்தின் பிரமோதா தேவி உடையார், எனக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை.
நிலத்தை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் என, பிரமோதா தேவி கூறுகிறார். தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்த பின், மாநில அரசின் உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

