மேம்பாலத்தின் கீழ்பகுதிகளில் பூச்செடிகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
மேம்பாலத்தின் கீழ்பகுதிகளில் பூச்செடிகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : மார் 18, 2026 05:32 AM
பெங்களூரு: நகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ்ப்பகுதி இடங்களை அழகாக்க, திட்டம் வகுக்க வேண்டும் என, நகர மேம்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, நகர மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
பெங்களூரின் பல்வேறு இடங்களில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் சார்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களின் கீழ்ப்புறம் உள்ள காலியிடங்கள் மேம்படுத்தப்படும்.
இப்பகுதிகளில் செடிகள் நட்டு அழகாக்க வேண்டும். இதற்காக பெங்களூரு மெட்ரோ நிறுவனம், குடிநீர் வாரியம், பி.டி.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாரியம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களை சுற்றிலும், பூச்செடிகள் நட திட்டம் வகுக்க வேண்டும்.
சாலை ஓரம் மற்றும் ஏரிகளை சுற்றிலும் மூங்கில் செடிகள் நட வேண்டும். ' ட்ரீ பார்க்' அமைக்க இடம் அடையாளம் காண வேண்டும். இதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து, அறிக்கை அளிக்க வேண்டும்.
சாலை ஓரத்தில் உள்ள இடங்கள், தனியார் மனைகளில் பார்க்கிங் வசதி செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இடத்தின் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
