/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளிருக்கு 2 மாதம் உதவித்தொகை பாக்கி இருப்பது உண்மை தான்: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட லட்சுமி ஹெப்பால்கர்
/
மகளிருக்கு 2 மாதம் உதவித்தொகை பாக்கி இருப்பது உண்மை தான்: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட லட்சுமி ஹெப்பால்கர்
மகளிருக்கு 2 மாதம் உதவித்தொகை பாக்கி இருப்பது உண்மை தான்: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட லட்சுமி ஹெப்பால்கர்
மகளிருக்கு 2 மாதம் உதவித்தொகை பாக்கி இருப்பது உண்மை தான்: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட லட்சுமி ஹெப்பால்கர்
ADDED : டிச 18, 2025 07:09 AM

கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், கிரஹ லட்சுமி திட்டம் அமலில் உள்ளது. பெண்கள் நல துறை சார்பில், மாதந்தோறும் பெண்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் பெண்களுக்கு செலுத்த வேண்டிய 2,000 ரூபாய் உதவி தொகை செலுத்தப்படவில்லை என்று, பா.ஜ., குற்றச்சாட்டு கூறியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பெண்கள் நல துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மறுத்து வந்தார்.
எங்கு போனது? கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடக்கிறது. இந்த இடம், லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.,வாக உள்ள பெலகாவி ரூரல் தொகுதியில் வருகிறது. ஆனாலும், கடந்த மூன்று நாட்களாக, லட்சுமி ஹெப்பால்கர் சட்டசபைக்கு வரவே இல்லை.
கிரஹ லட்சுமி பணம் குறித்து கேள்வி எழுப்புவோம் என்ற பயத்தில், சட்டசபைக்கு வராமல் லட்சுமி ஹெப்பால்கர் டிமிக்கி கொடுப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறி இருந்தார்.
நேற்று காலை சட்டசபை துவங்கியதும் அசோக் பேசுகையில், ''அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை மூன்று நாட்களாக காணவில்லை. முதலில் அவர் இங்கு வந்து கிரஹ லட்சுமி பணம் குறித்து பதில் அளிக்க வேண்டும். பின், சபை நடவடிக்கைகளை துவங்கலாம்.
இரண்டு மாத பணம் பாக்கி உள்ளது. அந்த பணம் எங்கே போனது. கட்சி பணிக்கு சென்றதா. அமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை என்றால், நாங்கள் போராடுவோம்,'' என்றார்.
சபாநாயகர் இருக்கை இதற்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், பா.ஜ., உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் நிலவியது. யார் என்ன பேசினர் என்றே புரியவில்லை.
சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், சபை நடவடிக்கைகளை சபாநாயகர் காதர் ஒத்திவைத்தார்.
சபாநாயகர் அறையில் துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், முதல்வரின் சட்ட ஆலோசகரான எம்.எல்.ஏ., பொன்னண்ணா, பெண்கள் நல துறை இயக்குனர் மகேஷ் பாபு ஆலோசனை நடத்தினர். பின், மீண்டும் சபை நடவடிக்கை துவங்கியது.
நோக்கம் அல்ல லட்சுமி ஹெப்பால்கரும் சட்டசபைக்கு வந்தார். அவர் பேசுகையில், ''பிப்ரவரி, மார்ச் மாதம் பெண்களுக்கு செலுத்த வேண்டிய 2,000 ரூபாய் வழங்குவதில் பிரச்னை உள்ளது. இது சரி செய்யப்படும். இதுவரை நான் அனைத்து மாதங்களும் பெண்களுக்கு பணம் சென்று விட்டது என்று கூறி இருந்தேன். இதற்காக வருத்தமும் தெரிவித்து கொள்கிறேன். சட்டசபையில் தவறான தகவல் கொடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார், ''அமைச்சர் வருத்தம் தெரிவிக்கக் கூடாது. மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, லட்சுமி ஹெப்பால்கர் மன்னிப்பு கேட்டார்.ஆனாலும் இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் உடன்படவில்லை.
வெளிநடப்பு அந்த நேரத்தில் சட்டசபைக்கு வந்த துணை முதல்வர் சிவகுமார், மத்திய அரசிடம் இருந்து கர்நாடகாவுக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. அதற்காக மத்திய அரசு திவாலாகி விட்டதாக கூற முடியுமா என்று கேட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய லட்சுமி ஹெப்பால்கர், ''நான் ஒரு பெண் என்பதால், நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்,'' என்றார்.
''பேச்சை மாற்றாதீர்கள்; பணம் செலுத்துவது எப்போது,'' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பினார். கூடிய விரைவில் செலுத்துவதாக லட்சுமி ஹெப்பால்கர் கூறினாலும், அவரது பதிலில் திருப்தி அடையாமல், பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பணத்தை தின்று விட்டாரா?
துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
சட்டசபையில், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் எந்த தவறான தகவலும் கொடுக்கவில்லை. அவரை காணவில்லை என்று பா.ஜ., தலைவர்கள் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. சுவர்ண விதான் சவுதா அமைந்திருக்கும் இடத்திற்கு லட்சுமி தான் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.
அவர் இங்கு தான் உள்ளார். அவர் என்ன பணத்தை தின்று விட்டாரா. சில காரணங்களால் பணத்தை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ., தலைவர்களுக்கு மானம், மரியாதை இருந்தால், மத்திய அரசு கர்நாடகாவுக்கு பாக்கி வைத்து உள்ள, நிலுவை தொகையை வாங்கி கொடுக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

