/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளை காதலித்த வாலிபரை கடத்தி கொன்ற தந்தை கைது
/
மகளை காதலித்த வாலிபரை கடத்தி கொன்ற தந்தை கைது
ADDED : டிச 21, 2025 05:16 AM
துமகூரு: மகளை காதலித்த வாலிபரை கடத்தி சென்று கொலை செய்த தந்தை, போலீசில் சரண் அடைந்தார்.
துமகூரு மாவட்டம் குனி கல் தாலுகாவின், கொத்தகெரே கிராமத்தில் வசித்தவர் செலுவா, 31. இவரும் அதே தாலுகாவின், ஆகலகோட்டே கிராமத்தை சேர்ந்த பூர்ணிமா, 24, என்பவரும், ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது, பூர்ணிமாவின் தந்தை கெம்பண்ணாவுக்கு, 58, பிடிக்கவில்லை.
தன் மகளை காதலிக்க கூடாது என, செலுவாவை எச்சரித்தார்; மகளையும் கண்டித்தார். ஆனால், செலுவாவை தவிர, வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என, பிடிவாதம் பிடித்தார் பூர்ணிமா. காதலர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.
இதனால், கோபமடைந்த கெம்பண்ணா, செலுவாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தன் உறவினர்கள் ராமகிருஷ்ணா மற்றும் மஞ்சுநாத்தின் உதவியை நாடினார். அவர்களின் உதவியுடன், இரண்டு நாட்களுக்கு முன், குனிகல் பஸ் நிலையத்தில் நின்றிருந்த செலுவாவை கடத்திச் சென்றார்.
ராம்நகர் மாகடியின் கட்டபுரா கிராமம் அருகே சென்றதும், செலுவாவை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன்பின், மாகடி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தனர்.

