/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'வீணாக்காதீர்கள்' பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்தும் வீரப்பாவின் தாரக மந்திரம்
/
'வீணாக்காதீர்கள்' பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்தும் வீரப்பாவின் தாரக மந்திரம்
'வீணாக்காதீர்கள்' பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்தும் வீரப்பாவின் தாரக மந்திரம்
'வீணாக்காதீர்கள்' பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்தும் வீரப்பாவின் தாரக மந்திரம்
ADDED : ஆக 10, 2025 02:40 AM

'வீணாக்காதீர்கள்' - இது ஹூப்பள்ளி - தார்வாடை சேர்ந்த வீரப்பா அரகேரியின் அன்றாட வேண்டுகோளாகும். இவர் வீடு வீடாக பிளாஸ்டிக் மற்றும் இ - கழிவுகளை சேகரித்து விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் பணத்தையும் தானம் செய்கிறார்.
ஹூ ப்பள்ளி - தார்வாடை சேர்ந்தவர் வீரப்பா அரகேரி. இவர் இன்ஜினியரிங் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில், கை நிறைய ஊதியம் பெற்று வந்தார். அவருக்கு தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் என, விரும்பினார். பொது சேவை செய்ய விரும்பிய அவர், வேலையை விட்டுவிட்டார்.
விழிப்புணர்வு ஹூப்பள்ளி -தார்வாட் இரட்டை நகரங்களை, பிளாஸ்டிக் இல்லாத நகரங்களாக்க உறுதி பூண்டுள்ளார். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். அது மட்டுமின்றி, வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள், இ - கழிவுகளை சேகரிக்கிறார்; இவற்றை விற்கிறார். இதில் கிடைக்கும் தொகையை, ஆதரவற்றோர் மையங்கள், கோசாலைகள், பிரதமர், முதல்வர் நிவாரண நிதிகளுக்கு ஏழைகளுக்கு தானம் செய்கிறார்.
வீரப்பா கூட்டுக்குடும்பத்தை சேர்ந்தவர். வசதிக்கோ, பணத்துக்கோ பஞ்சமில்லை; இவருக்கு பணத்தேவையும் இல்லை. சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது மட்டுமே, அவரது ஒரே குறிக்கோளாகும். இவர் பிளாஸ்டிக்கை விற்று கிடைக்கும் பணத்தை, சமுதாய நலனுக்கு செலவிடுகிறார்.
உறுதிமொழி பைக்கில் வீடு வீடாக செல்கிறார். மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் கழிவுகளை பெற்று வருகிறார். அப்படி செல்லும் போது, பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால், ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். 'பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது இல்லை' என, உறுதி மொழி எடுக்க வைக்கிறார்.
நாம் மற்றும் நம் குடும்பத்தினர் மட்டுமே, நன்றாக இருந்தால் போதும் என, சுயநலமாக சிந்திக்கும் மனிதர்கள் வாழும் இந்த சமுதாயத்தில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் வீரப்பா, மற்றவருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.
இது பற்றி அவர் கூறியதாவது:
கடந்த 2014 முதல் ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரில் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளேன். நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பது, என் விருப்பமாகும். பிளாஸ்டிக்கை விற்பதால் எனக்கு அதிக பணம் கிடைப்பது இல்லை. ஆனால் எவ்வளவு கிடைத்தாலும், அதை தானம் செய்கிறேன்.
அறக்கட்டளை பிளாஸ்டிக் கழிவுகளை அளிக்க விரும்புவோருக்கு ஒரு பை கொடுப்பேன். அதில் அவர்கள் தேவையற்ற பிளாஸ்டிக்கை போடுவர். அது நிறைந்ததும், அதை பெற்று கொண்டு வேறு பை கொடுப்பேன். என் சேவைக்கு மனைவியும், மகனும் ஆதரவாக நிற்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக தானம் செய்தேன். என் நற்பணிகளுக்காக, 'அக்கா பவுண்டேஷன்' என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்துள்ளேன்.
ஆனால் யாருக்கும் யோசிக்காமல், நான் உதவி செய்வது இல்லை. அவர்களின் நிலையை நன்றாக தெரிந்து கொண்ட பின், உதவுகிறேன். வசதியான வீடுகளில், பழைய நல்ல நிலையில் உள்ள உடைகள் உட்பட மற்ற பொருட்களை சேகரித்து, குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்குகிறேன்.
முதலில் நான் வீடு, வீடாக சென்று பொருட்கள் சேகரிப்பதை, அக்கம், பக்கத்தினர் தவறாக நினைத்தனர். என் சேவையை புரிந்து கொண்ட பின், அவர்களும் உதவ முன்வந்துள்ளனர். என்னிடம் பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரிக் பொருட்களை வழங்குவோர், அதற்காக பணம் ஏதும் வாங்குவது இல்லை. தங்களின் உதவியாக கருதி கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

