மைசூரு நஞ்சன்கூட்டில் உள்ள காவிரி நீர்ப்பாசன அலுவலகம் சார்பில் 2022ல் கால்வாயை சீரமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை ஒப்பந்தம் எடுத்து செய்த கான்ட்ராக்டர் அப்துலுக்கு 23 லட்சம் ரூபாய் பில் தொகை கொடுக்க வேண்டி இருந்தது. பணத்தை விடுவிக்க இன்ஜினியர் ரங்கநாத், கணக்கர் மகேஷ் ஆகியோர் 1.45 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுபற்றி லோக் ஆயுக்தாவில் அப்துல் புகார் செய்தார். நேற்று லஞ்ச பணத்தை கொடுத்தார். ரங்கநாத், மகேஷ் வாங்கினர். அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டம், சூரட்டு நரியம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஜோசப், 64. நேற்று முன்தினம் மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணைக்கு சுற்றுலா வந்தார். திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். அணை ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். மாரடைப்பால் இறந்துவிட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அணையில் வைத்து ஒரு பெண்ணை, ஜார்ஜ் ஜோசப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதால் மயங்கி விழுந்து இறந்ததாக சில சுற்றுலா பயணியர் கூறினர். மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிக்கமகளூரின் கொப்பா ஹரிஹரபுரா கிராமத்தின் மனோஜ், 17. நேற்று முன்தினம் நண்பர்களுடன் துங்கா ஆற்றில் குளித்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கி இறந்தார். அவரது உடல் தேடப்பட்டது. இரவானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று உடல் தேடப்பட்டது. நுகிமக்கி என்ற கிராமத்தில் மனோஜ் உடல் மீட்கப்பட்டது.
மைசூரு டவுன் கவுசியா நகரில் வசிக்கும் இம்ரான் மகள் சோனு, 17, ரிஸ்வான் மகள் சிம்ரன், 16, சையது மகன் சித்திக், 9, ஆகியோர் உறவினர்கள். மூன்று பேரும் மாண்டியா பாண்டவபுரா சிக்கயரஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தனர். நேற்று மாலை விஸ்வேஸ்வரய்யா கால்வாய் பகுதியை சுற்றி பார்க்க சென்றனர். கரையில் ஓடியபோது சித்திக் தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற சோனு, சிம்ரன் தண்ணீரில் குதித்தனர். ஆனால் 3 பேரும் கால்வாயில் மூழ்கி இறந்தனர். உடல்கள் தேடப்படுகின்றன.
தட்சிண கன்னடா விட்டலாவை சேர்ந்தவர் சவாத், 26. இவர், வேறு மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களின் மொபைல் நம்பருக்கு அடிக்கடி ஆபாச குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதுபற்றி அறிந்த அந்த மதத்தைச் சேர்ந்த வாலிபர்கள், பெண் போன்று பேசி, சவாத்தை நேற்று தங்கள் ஊருக்கு வரவழைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

