/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாலை பொழுதை ரசிக்க வைக்கும் 'சோட்டா லடாக்'
/
மாலை பொழுதை ரசிக்க வைக்கும் 'சோட்டா லடாக்'
ADDED : மே 07, 2025 11:23 PM

வார இறுதி நாட்களில் மாலை நேரத்தில் பொழுது போக்குவதற்கு பார்க், மால் சென்று போர் அடித்து விட்டதா... வேறு எங்கேயாவது சென்று வரலாம் என்று தோன்றுகிறதா. அப்படி நினைத்தால் நீங்கள் 'சோட்டா லடாக்' சென்று வரலாமே... 'என்ன லடாக்கா' என்று கேட்கலாம். ஆமாம்... லடாக் தான் ஆனால் காஷ்மீரில் இருக்கும் லடாக் இல்லை. பெங்களூரு அருகே உள்ள லடாக்.
பெங்களூருக்கு மிக அருகில் உள்ள மாவட்டமான கோலாரின் அரபி கொத்தனுார் கிராமத்தில் உள்ளது, 'சோட்டா லடாக்' என்ற சுற்றுலா தலம். காஷ்மீர் லடாக்கில் உள்ள கரடுமுடான அமைப்புகளுடன் சற்று ஒத்து போவதால், இந்த இடத்தை சோட்டா லடாக் என்று சுற்றுலா பயணியர் அழைக்கின்றனர்.
பசுமை மயம்
ஒரு கல்குவாரிக்குள் தேங்கி இருக்கும் மழைநீர், பிரமாண்ட பாறை அமைப்புகள் மூலம், பரந்து விரிந்த ஏரி போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த இடம் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சிறிது நேரம் விடுபட நினைப்பவர்களை ஈர்க்கும் இடமாக அமைந்து உள்ளது. ஏரியை சுற்றி பசுமையாக உள்ளது.
அதிகாலையில் இங்கு சென்றால், கல்குவாரி பாறை மீது அமர்ந்து சூரிய உதயத்தையும், மாலையில் சென்றால் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் வீசும் சில்லென காற்று, மனதை மயக்கும் வகையில் இருக்கும். கல்குவாரி பாறை மீது அமர்ந்து இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். புகைப்படம் எடுத்து மகிழ்வதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. குழந்தைகளுடன் ஓடி, ஆடி விளையாடவும் ஏற்ற இடமாக உள்ளது.
பாதுகாப்பு
கல்குவாரியில் தண்ணீர் 200 அடிக்கு மேல் தேங்கி இருப்பதால், அங்கு குளிக்க சுற்றுலா பயணியருக்கு அனுமதி இல்லை. கல்குவாரியின் தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தின் அருகே, சுற்றுலா பயணியர் சென்று விடாத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள், 200 பைக்குகளை நிறுத்தவும் இடம் உள்ளது.
மத்திய பெங்களூரு பகுதியில் இருந்து இந்த இடத்திற்கு செல்வோர் கே.ஆர்.புரம், ஹொஸ்கோட் வழியாக பயணிக்கலாம். ஒயிட்பீல்டு, மஹாதேவபுரா பகுதியில் இருந்து செல்வோர் காட்டுநல்லுார் கிராஸ் சென்று அங்கிருந்து வலதுபக்கம் திரும்பி, தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து ஹொஸ்கோட் அடைந்து அங்கிருந்து செல்லலாம்.
பெங்களூரு நகரில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில், சோட்டா லடாக்கை அடையலாம். அரபிகொத்தனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக செல்வதால், கிராம வாழ்க்கை நடைமுறையையும் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
- நமது நிருபர் -.

