/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஹால் டிக்கெட் கே.பி.எஸ்.சி., மீது தேர்வர்கள் கடும் கோபம்
/
நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஹால் டிக்கெட் கே.பி.எஸ்.சி., மீது தேர்வர்கள் கடும் கோபம்
நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஹால் டிக்கெட் கே.பி.எஸ்.சி., மீது தேர்வர்கள் கடும் கோபம்
நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஹால் டிக்கெட் கே.பி.எஸ்.சி., மீது தேர்வர்கள் கடும் கோபம்
ADDED : மே 04, 2025 12:24 AM
பெங்களூரு: கே.ஏ.எஸ்., அதிகாரிக்கான தேர்வுக்கு, நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஹால் டிக்கெட் விநியோகம் செய்ததால், கே.பி.எஸ்.சி., மீது தேர்வர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். விதான் சவுதாவில் அதிகாரிகளை சந்திக்கச் சென்ற தேர்வர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அரசு பணிகளுக்கு கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணையம் தேர்வு நடத்துகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் கே.ஏ.எஸ்., அதிகாரி பதவிக்கான முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டது. கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வினாத்தாளில் 56 தவறுகள் இருந்தன.
இதனால் பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாமல், முதற்கட்ட தேர்வில் 120 தேர்வர்கள் தோல்வி அடைந்தனர். வினாத்தாளில் இருந்த தவறை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்திலும் புகார் செய்தனர்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 120 தேர்வர்களையும், பிரதான தேர்வு எழுத அனுமதி அளித்தது.
பெண் கண்ணீர்
பெங்களூரு கஸ்துாரிபா நகரில் உள்ள, மாநகராட்சி கல்லுாரியில் நேற்று பிரதான தேர்வு நடந்தது. மொத்தம் 350க்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்.
ஆனால் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் செய்வதில் கே.பி.எஸ்.சி., அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். நேற்று முன்தினம் இரவு வரை ஹால் டிக்கெட் விநியோகம் செய்யவில்லை.
இதை கண்டித்து விதான் சவுதா அருகே உள்ள கே.பி.எஸ்.சி., அலுவலகம் முன் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நள்ளிரவு 12:00 மணியில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணி வரை, ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.
ஹால் டிக்கெட் பெற்ற தேர்வர்கள், காலை 8:00 மணிக்கு நடந்த தேர்வில் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட ஒரு பெண் தேர்வர் பேசுகையில், 'கே.பி.எஸ்.சி., வரலாற்றில் நள்ளிரவில், ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
பெங்களூரில் இருப்பவர்கள் ஹால் டிக்கெட் எப்போது வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வடமாவட்டங்களில் இருந்து வருபவர்களால் வாங்க முடியுமா? ஆட்சியில் இருப்பவர்கள் குடும்பத்தினர் மட்டும் தான், அரசு பணிக்கு வர வேண்டுமா? ஏழை, எளிய வீடுகளின் பெண்கள் அதிகாரியாக வர கூடாதா?' என கண்ணீர்மல்க கேள்வி எழுப்பினார்.
பழிவாங்கிய அரசு
ஹால் டிக்கெட் விநியோகத்தில் நடந்த குளறுபடி பற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்ய, தேர்வர்கள் சிலர் நேற்று மதியம் விதான் சவுதாவுக்கு சென்றனர். ஆனால் அவர்களை நுழைவுவாயில் பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அவர்களில் ஒருவரை ஜீப்பில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர். மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கே.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்திற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னுக்கு வரக்கூடாதா?
வினாத்தாளில் தவறு இருந்ததை சுட்டிகாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கே.பி.எஸ்.சி., தேர்வர்களை அரசு பழிவாங்கி உள்ளது. பலரது வாழ்க்கையில் அரசு விளையாடுகிறது. கன்னட வழியில் தேர்வு எழுதுபவர்கள் ஏன் இப்படி வெறுக்கப்படுகின்றனர்? ஏழை வீட்டு பிள்ளைகள் முன்னுக்கு வரக்கூடாதா?
தேர்வுக்காக பல ஆண்டுகளாக இரவு, பகலாக தயாராகி வரும் தேர்வர்களின் பாவம் உங்களை சும்மா விடாது. கே.பி.எஸ்.சி.,யில் திருத்தம் செய்வதாக முதல்வர் கூறியது வெறும் வெற்று வாக்குறுதியா? தேர்வர்களை தேவையின்றி துன்புறுத்தாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாங்கள் எப்போதும் நிற்போம்.
அசோக்,
எதிர்க்கட்சித் தலைவர்

