தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/விவசாய மலர்/பூக்களின் கழிவில் இருந்து உரம் தயாரிப்பு

பூக்களின் கழிவில் இருந்து உரம் தயாரிப்பு

பூக்களின் கழிவில் இருந்து உரம் தயாரிப்பு


PUBLISHED ON : மார் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லிகை, பிச்சி, முல்லை, சம்பங்கி, தாமரைப் பூக்களில் இருந்து வாசனைத் திரவியத்தை (கான்கிரீட்) பிரித்தெடுத்து விற்பதோடு தொழிற்சாலையில் மிஞ்சும் பூக்கழிவுகளை காயவைத்து உரமாக்கி தோட்டத்திற்கு பயன் படுத்துகிறார் திண்டுக்கல் நிலக்கோட்டை கொம்புக்காரன்பட்டியைச் சேர்ந்த விவசாயி, பூக்களின் கான்கிரீட் உற்பத்தியாளர் பாலகிருஷ்ணன்.

அவர் கூறியதாவது:

சென்னையில் இருந்து திண்டுக்கல் நிலக்கோட்டை வந்து இங்கு தொழிற்சாலை அமைத்தோம். 1990ல் பூக்களில் இருந்து 'கான்கிரீட்' பிரிக்கும் தொழிற்சாலை ஆரம்பித்த போது மல்லிகையின் விலை கிலோ ரூ.2 முதல் ரூ.5 வரை இருந்தது.

விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பதைத் தடுக்கும் வகையில் கிலோ ரூ.10 என விலை நிர்ணயம் செய்தோம். அதற்கும் கீழே வியாபாரிகள் விலை கேட்கும் போது என்னிடம் விவசாயிகள் நேரடியாக விற்பதற்கு ஏற்பாடு செய்தோம்.

மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் மல்லிகைப்பூக்கள் தான் அதிகம் உற்பத்தியாகிறது. மல்லிகையில் இருந்து கான்கிரீட் உற்பத்தியை ஆரம்பித்தது நான் தான். இதிலிருந்து நேரடியாக சென்ட் ஆக தயாரிக்க முடியாது. கான்கிரீட்டில் இருந்து வாசனை திரவியம் உட்பட 64 வகையான பொருட்களை பல்வேறு முறைகளின் மூலம் தயாரிக்க முடியும்.

சீசன் நேரத்தில் தினமும் 10 டன் வரை பூக்கள் எங்களுக்கு கிடைக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு செப்டம்பர் வரை சீசன் களை கட்டும். நள்ளிரவில் கூட பூக்கள் இங்கு வரும். உசிலம்பட்டி, வலையங்குளம், திருத்தணி, திருவண்ணாமலை, திண்டிவனம், சென்னை, திருச்சி, திண்டுக்கல், நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில், ராஜபாளையத்தில் இருந்து பூக்களைப் பெறுகிறோம்.

மல்லிகையைப் பொறுத்த வரை காலையில் பூக்கள் கிடைத்தாலும் மலர்ந்த பின்பே எங்கள் வேலை ஆரம்பிக்கும். மல்லிகை ரொம்பவும் மலரக்கூடாது, மலராமலும் இருக்கக்கூடாது. இதழ்களில் இருந்து வாசனையைத் தான் தனியாக எடுக்கிறோம். ஹெக்சேன் என்ற ரசாயன திரவத்துடன் பூக்களுடன் கலந்து வைத்தால் ஹெக்சேனில் வாசனை கலந்து விடும்.

இந்த ஹெக்சேனை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் மொத்தமும் வீணாகி விடும். 1990 முதல் 1995 வரை நிறைய பரிசோதனைகளில் வீணாக்கிவிட்டேன். ஒரு எக்ஸ்ட்ராக்டர் இயந்திரத்தில் 1000 கிலோ பூக்களை கொட்டி 'கான்கிரீட்' தயாரிக்க முடியும். மூன்று நிலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் நீராவியை செலுத்தி ஹெக்சேனை தனியாக பிரித்து பூக்களின் வாசனையை மட்டும் 'கான்கிரீட்' ஆக சேகரிக்கிறோம். 6 இயந்திரங்களில் 6000 லிட்டர் ரசாயன திரவத்துடன் கூடிய வாசனை திரவியத்தை 30 கிலோ அளவாக பிரித்து விடுவோம். அந்த ஹெக்சேன் திரவத்தை மீண்டும் பூக்களுக்கு பயன் படுத்துவோம். 30 லிட்டர் கலவையை சேர்த்து 200 லிட்டர் வரை சேகரித்து மீண்டும் சுத்திகரித்து 'கான்கிரீட்'டை விற்பனை செய்கிறோம்.

தண்ணீரும், கழிவும் பூவில் 70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் தான் இருக்கும். 750 கிலோ மல்லிகைப்பூக்களில் இருந்து ஒரு கிலோ கான்கிரீட் கிடைக்கும். அதில் கடைசியாக 50 முதல் 70 கிலோ பூக்கழிவு கிடைக்கும். இதை காயவைத்து உரமாக்கி தோட்டத்து மரங்களுக்கு தருகிறோம். இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு இதுகுறித்து செய்முறை விளக்கம் அளித்துள்ளேன். மீன் அமிலத்தை விட இதில் வாசனை குறைவு என்பதால் விவசாயிகள் உரமாக பயன்படுத்தலாம்.

மல்லிகை மட்டுமின்றி சீசனுக்கு ஏற்ப பிச்சி, முல்லை, தாமரை, சம்பங்கி பூக்களில் இருந்தும் கான்கிரீட் பிரித்து விற்கிறோம். பூக்கழிவையும் உரமாக்குவதால் வேஸ்டேஜ் தவிர்க்கிறோம் என்றார்.

- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us