தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/விவசாய மலர்/டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவது எப்படி

டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவது எப்படி

டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவது எப்படி


PUBLISHED ON : ஜூன் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பயிர்களைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகளை அழிக்கும் நன்மை தரும் இயற்கை பூஞ்சையே டிரைக்கோடெர்மா விரிடி. பயிர்களில் நோய் வரும்முன் காத்து நோய் வராமல் தடுக்கும் டிரைக்கோடெர்மா உயிர் எதிர் பூஞ்சாணம் மருந்து பயன்படுத்தும் முறையை விவசாயிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு வகையான பயிர்களில் மண் மூலம் பரவும் பூஞ்சாண வேர் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தாவர ஹார்மோன்களை உற்பத்தி செய்து வேரின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது.

மண்ணில் உள்ள மட்காத குப்பை மற்றும் விவசாயக் கழிவுகளை எளிதாகவும், விரைவாகவும் மட்க வைத்து உரமாக்குகிறது. மண்ணில் கரைய முடியாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் போன்ற சத்துக்களைக் கரைத்து தாவரங்கள் எளிதில் உறிஞ்ச உதவுகிறது. இதனை விதைநேர்த்தி, நாற்று நனைப்பு மற்றும் மண் இடுதல் போன்ற முறைகளில் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 4 முதல் 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி துாளைப் பயன்படுத்த வேண்டும். சிறிதளவு தண்ணீருடன் அல்லது அரிசி கஞ்சியுடன் இந்தத் துாளைக் குழைத்து விதைகளில் நன்றாகப் படுமாறு கலந்து நிழலில் உலர வைத்து விதைத்தால், விதைப்பதன் மூலம் வேர் அழுகல் நோய் தடுக்கப்படுகிறது.

நாற்று நனைப்பு

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா துாள், மட்கிய சாண எருவைச் சேர்க்க வேண்டும். நடவு செய்வதற்கு முன், நாற்றுகளின் வேர்களை இந்தக்கலவையில் 10 நிமிடங்கள் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

வயலில் இடுதல்

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 2.5 முதல் 5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நிலத்தில் சீராகத் துாவ வேண்டும். நடவு செய்வதற்கு முன் நிலத்தை உழும்போது இதைச் சேர்க்க வேண்டும்.

ஒரு செடி அல்லது மரத்திற்கு 10 முதல் 50 கிராம் டிரைக்கோடெர்மா துாளை, மண்புழு உரம் அல்லது தொழு உரத்துடன் கலந்து வேர்ப்பகுதியில் இட்டு மண்ணால் மூட வேண்டும்.

டிரைக்கோடெர்மா விரிடியைப் பயன்படுத்தும் முன், ரசாயன பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது. மற்ற உயிர் உரங்கள் மற்றும் இயற்கை இடுபொருட்களுடன் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். சூரிய ஒளி நேரடியாகப் படாதவாறு நிழலான இடங்களில் இவற்றை சேமிக்க வேண்டும்.

விவசாயிகள் தயாரிக்கலாம்

விரிடி பூஞ்சாணத்தை வீட்டிலேயே சாண எரு அல்லது தொழு உரத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பெருக்கம் செய்யலாம். இதற்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி துாள், மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் 100 கிலோ, தண்ணீர் தேவை.

நிழலான ஒரு இடத்தில் 100 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தைக் கொட்டி பரப்பி டிரைக்கோடெர்மா விரிடி துாளைச் சேர்த்து கிளறி விட வேண்டும். இதன் மேல் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து உரத்தில் 50 சதவீத ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். கையில் பிடித்தால் தண்ணீர் வழியக் கூடாது.

இக்கலவையை சாக்குப்பை அல்லது தென்னை ஓலைகளைக் கொண்டு காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். 3 நாட்களுக்கு ஒருமுறை சாக்கை எடுத்து கலவையை கிளறிவிட்டு தேவைப்பட்டால் மீண்டும் தண்ணீர் தெளித்து மூடி வைக்க வேண்டும்.

7 முதல் 10 நாட்களில் உரத்தின் மேல்பகுதி முழுவதும் பச்சை நிற பூஞ்சாணப் படலம் படர்ந்திருக்கும். இதை மரம், செடி, கொடிகளுக்கு பயன்படுத்தலாம்.

தொட்டிச் செடிகள், காய்கறிச் செடிகளுக்கு தலா 50 முதல் 100 கிராம் எடுத்து வேர்ப் பகுதியில் இட்டு மண்ணைக் கிளறி விட வேண்டும். மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பழ மரங்களுக்கு வயது மற்றும் அளவைப் பொறுத்து 1 முதல் 2 கிலோ வரை மரத்தைச் சுற்றிலும் குழி எடுத்து வேர்ப்பகுதியில் இட்டு மூட வேண்டும்.

இந்த இயற்கை பூஞ்சாணத்தைப் பயன்படுத்திய பிறகு குறைந்தது 15 முதல் 20 நாட்களுக்கு நிலத்திலோ அல்லது செடிகளுக்கோ எந்தவொரு ரசாயன பூஞ்சைக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது.



- அரிபுத்திரன், வேளாண் அலுவலர்

உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்,

வேளாண் துறை

விருதுநகர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us