PUBLISHED ON : செப் 21, 2025

பார்வையின் மறுபக்கம் படத்தில், விஜயகாந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார், ஸ்ரீப்ரியா. ஆனால், ஊட்டியில், 'அவுட்டோர் ஷூட்டிங்'கிற்கு வரவில்லை, ஸ்ரீப்ரியா. கெஞ்சிக் கூத்தாடி, 'ஹீரோயினை' வரவழைத்து, 'டூயட் சீன்' எடுத்தனர்.
இத்தனைக்கும், பார்வையின் மறுபக்கம் படம், 'ஹிப்னாட்டிசத்தை' மையப்படுத்தி, புதுமையான கதையம்சம் கொண்டது. ஓரளவு நன்றாக ஓடியது.
'அந்த கருப்பன் கூட யாரு நடிப்பாங்க?' என, விஜயகாந்தை ஒதுக்கினர், பல நடிகையர். ஆனால், சிலுக்கு மட்டும், நிற வேற்றுமை காட்டாமல், விஜயகாந்துடன் தொடர்ந்து ஆடிப் பாடினார். சிலுக்கும், விஜயகாந்தும் சேர்ந்து நடித்த, பட்டணத்து ராஜாக்கள் படம், பட்டி தொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பியது.
எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கிய, கன்னட சினிமா ஒன்று, கர்நாடகாவில் பிரமாதமாக வசூலித்தது. 'டபுள் ஹீரோ சப்ஜெக்ட்' அது. விஜயகாந்த், மோகன் இணைந்து நடிக்க அதை, வெற்றி நமதே என்ற பெயரில், தமிழில் எடுக்க முடிவு செய்தார், எஸ்.ஏ.சி., மீண்டும் தாய்வீட்டில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் துள்ளிக் குதித்தார், விஜயகாந்த்.
ஆனால், அப்படத்தில் இன்னொரு, 'ஹீரோ' ஆக ஒப்பந்தமான வெள்ளி விழா நாயகன், மோகன் மறுத்து விட்டார். வெற்றி நமதே படத்துக்கான முயற்சிகள் முளையிலேயே முடங்கி போயின.
சோபன் பாபு - மாதவி நடிக்க, பலிதானம் என்ற, புதிய தெலுங்கு படத்தை உருவாக்கியிருந்தார், எஸ்.ஏ.சி., பி.எஸ்.வீரப்பாவுக்கு படத்தை போட்டு காட்டினார், எஸ்.ஏ.சி., பலிதானம் படம், ரத்தம் என்ற மலையாள படத்தின், 'ரீ-மேக்' என்றனர். 80களில், சென்னை ஆனந்த் தியேட்டரில் வெளியாகி, இளைஞர்கள் மத்தியில் புயலைக் கிளப்பியது.
பலிதானம் தமிழிலும் ஜெயிக்கும் என, வீரப்பாவுக்கு உறுதியாக தோன்றியது. எஸ்.ஏ.சியிடம், 'நாம இதை தமிழில் செய்யலாம். நீங்களே டைரக்ட் பண்ணுங்க...' என்றார்.
'ஹீரோவா நம்ம, விஜியையே போட்டுக்கலாம்...' என, ஆசையோடும், பரிவோடும் சொன்னார், எஸ்.ஏ.சி.,
'என்னது விஜயகாந்தா! அவரையா, 'ஹீரோ'வா போடப் போறதா சொல்றீங்க. விஜிக்கு சுத்தமா மார்க்கெட் அவுட்டுய்யா. இன்னைக்கு, 'ஹீரோ' பிரபுன்னா, உடனே படப்பொட்டியை எடுக்குறாங்க. போய், சிவாஜி பிலிம்ஸ் ஷண்முகம்கிட்ட பேசுங்க. அவர் தான், பிரபுவோட, 'கால்ஷீட்'டை பார்க்குறாராம்...' என்றார், வீரப்பா.
தமிழில், எஸ்.ஏ.சி.,யின் முந்தைய படங்கள் படுதோல்வி அடைந்ததால், சிவாஜி குடும்பத்தினர் அவரை கைவிட்டு விட்டனர். பிரபு நடிக்க மாட்டார் என தெரிந்ததும், கார்த்திக்கை அணுகினர். அவரும் கிடைக்கவில்லை.
வீரப்பாவிடம், 'விஜயகாந்தையே, 'ஹீரோ' ஆக நடிக்க வைத்து, உங்களுக்கு மகத்தான வெற்றியை தேடித் தருகிறேன்...' என, மீண்டும் மீண்டும் மன்றாடினார், எஸ்.ஏ.சி.,
விஜயகாந்த் வசம் மிச்சமிருந்த, தீர்ப்பு என் கையில் படம், நிதி நெருக்கடியால் நின்று போனது. மேகம் திரைப்படமும் வாங்குவாரின்றி முடங்கியிருந்தது.
சி வப்பு மல்லி துவங்கி, விஜயகாந்தின் பல படங்களை தொடர்ந்து இயக்கினார், ராம நாராயணன். ஏற்கனவே வெளியான வெற்றி படங்களை காலத்துக்கு ஏற்ப, பட்டி பார்த்து, 'ரீ-மாடலிங்' செய்வது அவரது, 'சக்ஸஸ் பார்முலா!'
வந்தாளே மகராசி, வாணி ராணி ஆகிய திரைப்படங்கள் இணைந்த கலவையாக, தங்கமடி தங்கம் என்ற படத்தை உருவாக்கினார், ராம நாராயணன். கே.பாக்யராஜின், அந்த ஏழு நாட்கள் அட்டகாசமாக ஓடியது. அந்த வெற்றியின் எதிரொலியாக, அம்பிகாவுக்கு, தங்கமடி தங்கம் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்தது.
'ஹீரோயின் சப்ஜெக்ட் ஆக இருந்தாலும், நம்ம விஜி நடித்தால், நாலு சண்டை காட்சி சூப்பரா வைக்கலாமே...' என, மனக்கணக்கு போட்டார், ராம நாராயணன். விஷயம் அறிந்து, ராம நாராயணனின் வீட்டுக்கு சென்றார், விஜயகாந்த். ஒப்புதலும், நன்றியும் தெரிவித்து, உற்சாகமாக திரும்பினார். புதிய படத்தில் ஒப்பந்தம் ஆனதில் சந்தோஷக் கனவுகள் நெஞ்சில் சதிராடின.
ஆனாலும், 'தினத்தந்தி' நாளிதழில், விஜயகாந்த் - அம்பிகா முதன் முதலாக இணைந்து நடிக்கும், தங்கமடி தங்கம் என்ற தகவல் இடம் பெறவில்லை. ஒரே நேரத்தில், அரை டஜன் படங்களை இயக்குவது, ராம நாராயணனின் வழக்கம். அதனால், பொறுத்துப் பார்க்கலாம் என, தோன்றியது, விஜயகாந்துக்கு.
மறுநாள், ராம நாராயணனின் துாதுவராக, கருமாரி கந்தசாமி வந்தார்.
'தம்பி உனக்கு இப்ப மார்க்கெட் இல்லைன்ற பேச்சு அதிகமா அடிபடுது. அதான், டைரக்டர் கொஞ்சம் தயங்கறாரு...' என, கண்ணீர் புகை குண்டை துாக்கி போட்டார். விஜயகாந்தால் தன் உள்ளக் குமுறலை வெளிக்காட்டி கொள்ள முடியவில்லை.
'அண்ணே எனக்கு இப்ப மார்க்கெட் கிடையாது. எப்போ அது திரும்பி வருதோ, அப்ப உங்க டைரக்டர் படத்துல நடிக்கிறேன். பிறகு உங்க இஷ்டம் சார்...' என, விடை கொடுத்தார்.
தங்கமடி தங்கம் , 1984ல், தைத் திங்கள் திருநாளில் வெளியாது. நாயகனாக தோன்றியவர், எஸ்.வி.சேகர்.
கா த்தாடி ராமமூர்த்திக்காக, விசு எழுதிய, மேடை நாடகம், 'டவுரி கல்யாண வைபோகமே!'
விசுவின் நாடகத்தை, கல்யாணச் சந்தையிலே என்ற பெயரில், திரைப்படமாக, கே.பாலசந்தர் இயக்குவதாக இருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை.
பின்னர், விசு, இயக்குனரானதும், அவரே நாயகனாக நடித்து, தன் நாடகத்தை, டவுரி கல்யாணம் என, திரைப்படமாக்கினார். கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற விதியை, விசுவின், டவுரி கல்யாணம் படத்துக்காக தளர்த்தினார், விஜயகாந்த்.
டவுரி கல்யாணம் படத்தில் நடித்தபோது, விஜயகாந்த் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். அதை அவரே மிகுந்த துயரத்துடன் பதிவு செய்திருக்கிறார்...
'சத்யஜோதி பிலிம்ஸ் என்னை, 'ஹீரோ' ஆக வைத்து படம் பண்ண, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தனர். என் மார்க்கெட் போனதால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். கைச்செலவுக்கு கூட காசில்லாத நிலையில் என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சேன்...'
அப்போது...
- தொடரும்
பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொபைல் எண்: 7200050073