PUBLISHED ON : டிச 27, 2025

குட்டீஸ்... 'ஹேப்பி நியூ இயர்' என்று, ஜனவரி முதல் தேதி ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்கிறோமே; இந்த புத்தாண்டு பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா...
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுவது, 500 ஆண்டுகளாகத் தான். இதை மெசபடோமியர்கள் தான், முதன் முதலாகக் கொண்டாடினர்.
மெசபடோமியா என்பது, மேற்கு ஆசிய நாடுகளான ஈராக்கின் பெரும்பகுதி மற்றும் ஈரான், துருக்கி, சிரியா, குவைத் பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது, இவர்கள் மார்ச் 25ம் தேதியை, ஆண்டின் முதல்நாளாகக் கருதினர். இவர்களது காலண்டரில், பத்து மாதங்கள் தான் இருந்தன.
இது சரியாக இருக்காது என, ரோமானிய மன்னர், நுமா பாம்பிளியஸ் கருதினார். 'சூரியனின் நகர்வைப் பொறுத்து, 12 மாதங்கள் தான் சரியாக இருக்கும்' என்ற அவர், மார்ச் முதல் தேதியை புத்தாண்டு தினமாக்கினார். அத்துடன், ஜனவரி, பிப்ரவரி என்ற இரண்டு மாதங்களை டிசம்பருக்கு அடுத்தபடியாக, அதாவது கடைசி இரண்டு மாதங்களாக வரும்படி சேர்த்தார்.
அதன்பின், இப்போதைய ஜனவரி முதல் தேதியை, புத்தாண்டு தினமாக அறிவித்தவர் யார் தெரியுமா... ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் தான்.
இந்த மாற்றம், கி.மு., 46ல், நடைமுறைக்கு வந்தது. இந்த மாற்றம் செய்வதற்கு ஒரு காரணம் இருந்தது.
ரோமானியர்கள், 'ஜானஸ்' என்ற தெய்வத்தை வணங்கி வந்தனர். இந்து தெய்வங்களில், பிரம்மாவுக்கு நான்கு முகம், சிவனுக்கு ஐந்து முகம் என்றெல்லாம் சொல்கிறோம் இல்லையா... அதுபோல், ஜானஸ் தெய்வத்துக்கு இரண்டு முகங்கள்.
இவரை, 'காலக்கடவுள்' என்றனர். அதில் ஒரு முகம், நிகழ்காலத்தையும்; இன்னொரு முகம், எதிர்காலத்தையும் கணிப்பதாக நம்பினர்.
இதனால், ஜானஸ் என்ற இந்த தெய்வத்தின் பெயரால், ஜனவரி என்ற பெயர் சூட்டிய மாதத்தை, ஆண்டின் முதல் மாதம் ஆக்கினர். ஜனவரி மாதம் ஜானஸ் என்ற தெய்வத்தின் பெயரால் உருவானது என்றால், பிப்ரவரி மாதம், 'பெப்ரூவா' என்ற, மனதைத் துாய்மையாக்கும் விழாவின் பெயரால் உருவானது.
மார்ச் மாதத்துக்கு, 'மார்ஸ்' என்ற போர்க்கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. லத்தீன் மொழியில், 'ஏப்ரிலிஸ்' என்ற வசந்த கால பூக்கள் மலரும் காலத்தின் பெயரால், ஏப்ரல் மாதம் உருவானது.
கிரேக்க கடவுளான 'மேய்யா' மற்றும் ரோமானியக் கடவுள் 'மேய்ஸ்டா' என்ற கடவுளரின் பெயரால் மே மாதமும், கடவுளரின் ராணி என போற்றப்படும், 'ஜூனோ' என்ற பெண் தெய்வத்தின் பெயரால், ஜூன் மாதமும் பிறந்தன.
ஜூலியஸ் சீசர் பெயரால் ஜூலை மாதமும், முதல் ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பெயரால் ஆகஸ்ட் மாதமும் வந்தது.
முன்னொரு காலத்தில் மார்ச் முதல் மாதமாக இருந்த போது, ஏழாம் மாதமாக இருந்ததன் அடிப்படையில், 'செப்டம்' என்ற லத்தின் எண்ணான ஏழின் பெயரால், செப்டம்பர் மாதம் வந்தது.
'ஆக்டோ' என்ற எட்டாம் எண்ணின் பெயரால் அக்டோபரும், 'நோவம்' என்ற ஒன்பதாம் எண்ணின் பெயரால் நவம்பரும், 'டெசிம்' என்ற பத்தாம் எண்ணின் பெயரால் டிசம்பரும் பிறந்தன.
வரும் 2026 புதிய ஆண்டில், புத்தாண்டு மாதங்களின் பெயர்க் காரணத்தை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே...
குட்டீஸ்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- தி.செல்லப்பா

