தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஜூன் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா...

நான் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன். வசதியான குடும்பம் தான். பெரும் செல்வந்தர்கள் இல்லை; ஆயினும் குறையற்ற வாழ்க்கை. இப்போது பிளஸ் 2 தேர்வு எழுதி இருக்கிறேன். மேற்படிப்பிற்கு சென்னை செல்ல விரும்புகிறேன்.

எந்தந்த கல்லுாரிகளுக்கு பதிவு செய்ய வேண்டும்... என்ன படிக்க வேண்டும்... என்பதையெல்லாம் சொல்லித்தர, கிராமத்தில் யாருமில்லை. படிப்பு மட்டுமின்றி, வேலைவாய்ப்பு குறித்தும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன். வழிகாட்டுவீர்களா அம்மா...

- இப்படிக்கு,

சரவணபவன்.



அன்பு சரவணபவா,

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு நிச்சயம் வழிகாட்டிகள் தேவை. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அகாடமிகள் உள்ளது போல, இதற்கும் வகுப்புகள் நடத்தலாம். பள்ளி முடிந்து விடுமுறை நாட்களில் நடத்துவது சிறப்பு. ஒவ்வொருவரின் தனித்திறமைகளை கேட்டறிந்து, பரிசோதித்து, அவரவருக்கான படிப்பை பரிந்துரைக்கலாம்.

தற்காலத்தில் நிறைய புதுப்புது துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., ட்ரோன், சைபர் செக்யூரிட்டி, குவாண்டம் கம்ப்யூட்டிங், ரோபோடிக், ஆட்டோமேஷன் என, எத்தனையோ படிப்புகள் உள்ளன. எங்கள் தலைமுறை அறியாத, பல துறைகளிலும் நவீன கல்விகள் வந்துள்ளன.

பத்தாம் வகுப்பிலிருந்து உன் ஆர்வம் எதில் இருந்தது. பிளஸ் 1 வகுப்பில் எதில் வெற்றி பெற்றாய் என்பதை நீயே யோசித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் படிக்க வேண்டிய படிப்பையும், கல்லுாரியையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி தேர்ந்தெடுத்தால் மட்டுமே விருப்பமுள்ள பாடமாக அமையும். அப்படி அமைவதை, நீயும் ஊக்கமாக படிப்பாய். இந்த பகுத்தாய்வு மிகவும் அவசியம்.

வெறும் டிகிரி படிப்பு மட்டும் இப்போது உதவாது. இன்ஜினியரிங் படித்தாலும், இப்போது இளைய தலைமுறை விரும்பும் தகவல் தொழில்நுட்பத்துறை வேலைக்கு செல்லும் போது, எந்த கல்லுாரியாக இருந்தாலும், எல்லா பட்டதாரிகளையும் ஒன்றாக தான் பார்ப்பர். பிட்ஸ் பிலானியா, அண்ணாமலை பல்கலைக்கழகமா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். எந்த கல்லுாரி என்பதெல்லாம் அங்கு எடுபடாது. கணிதம், அறிவியலில் என்ன மதிப்பெண் என்பது மட்டும் தான் எடுபடும்.

தேசிய கல்விக் கொள்கைகளில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திறன், தொழில்நுட்பம் இரண்டும் முக்கிய அம்சங்கள்.

பிளஸ் 2 எழுதியாகி விட்டது. இனி நிம்மதி என்று ஜாலியாக ஊர் சுற்றாதே. துாங்கி பொழுதை கழிக்காதே. தொழில் நுட்பம் என்றால் என்ன என்பதை தீர விசாரித்து தெரிந்து கொள். உன் தலைமுறையில் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டர் துறையில் புரோகிராம், சாப்ட்வேர் எனப்படும், மென்பொருள் மேம்பாடு போன்றவை குறித்து அறிந்து கொள். இவற்றை விளக்கும் வகுப்புகள் உள்ளனவா என்று விசாரி.

வேலை வாய்ப்புகளில் இனி வரும் காலங்களில் இடம் பெற போவது டேட்டா சயின்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், விண்வெளித்துறை இவைகள் முந்தும். இவை குறித்து முற்றிலும் அறிந்து கொள்ள, எத்தனையோ கல்வி நிறுவனங்கள் பொது இடங்களில் மாணவ - மாணவியருக்கு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த துறைகளில் முதன்மையாக திகழ்ந்தோரும், திகழ்வோரும், கேள்விகளுக்கு விளக்கமளித்து, சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றனர்; வழிகாட்டுகின்றனர்; விரிவுரையாற்றுகின்றனர்.

தம்பி சரவணபவா... ஒவ்வொரு ஆண்டும், 'தினமலர்' நாளிதழ் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதை அறிவேன். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இது நடக்கும். வேறு பத்திரிகைகளும், கல்வி நிறுவனங்களும் நடத்தலாம். கேட்டு அறிந்து அந்த நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று, கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தினமலர் நாளிதழை தொடர்பு கொண்டு அது குறித்த விபரத்தையும் கேட்டுக் கொள்.

தேடுதல் உள்ளவனுக்கே தேடப்படுவது கிட்டும்!

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us