
பிளாரன்ஸ் ஆன்ட்டி,
நான், ஐந்தாம் வகுப்பும், என் தம்பி ரமேஷ் மூன்றாம் வகுப்பும் படிக்கிறோம். இருவரும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறோம். பக்கத்து தெருவில் தான் நாங்கள் படிக்கும் பள்ளிக்கூடம் இருக்கிறது. நடந்து தான் போவோம்; நடந்து தான் வீடு திரும்புவோம்.
அதே தெருவில், அப்பா கடை நடத்துகிறார். காலையில் 8:30 மணிக்கு கடையை திறந்தால், இரவு 10:00 மணிக்கு தான் வீடு திரும்புவார். பகல் சாப்பாட்டை, கேரியரில் அம்மா கட்டி வைப்பார். கடை ஊழியர் வந்து, எடுத்து செல்வார்.
அப்பா மிகவும் கண்டிப்பானவர். அம்மாவை போலவே, நாங்களும் அப்பாவுக்கு பயப்படுவோம். அவர் விருப்பப்படி தான் வீட்டில் எல்ல விஷயமும் நடக்கணும்.
ஒரு நாள் ஸ்கூலில் இருந்து வரும்போது, தெருவில் ஒரு சின்ன நாய்க்குட்டியை பார்த்தோம். அது, வெள்ளை வெளேர்ன்னு அழகான நாய்க்குட்டி. மிரண்டு போய் சுற்றி அலைந்து, குரைத்துக் கொண்டு இருந்தது.
அதனிடம் விளையாடிய எங்களுக்கு, அதை எடுத்து வளர்க்க ஆசை வந்தது. வீட்டுக்கு துாக்கி வந்து விட்டோம். அப்பாவுக்கு நாய் என்றாலே பிடிக்காது. அதனால், எங்கள் அறையில் துணி போட்டு, நாய்க்குட்டியை மறைத்து வைத்திருந்தோம்.
மறுநாள் காலை, நாய்க்குட்டி வெளியில் வந்த போது, அப்பா பார்த்துவிட்டார்.
நாய் எப்படி வீட்டிற்குள் வந்தது என, அப்பா சத்தம் போட்டார். தயங்கி தயங்கி சொன்னோம்.
'முதல்ல எடுத்த இடத்திலேயே கொண்டு போய் விட்டுட்டு வாங்க'ன்னு கோபத்தோடு சொன்னார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.
'மழை நிற்கட்டும்ப்பா'ன்னு கெஞ்சினோம். 'குடை பிடிச்சுட்டு போய் விட்டுட்டு வா'ன்னு கண்டிப்புடன் சொன்னார்.
அதன்படி அழுதுகிட்டே போய், நாய் குட்டியை மீண்டும் தெருவிலேயே விட்டுவிட்டோம். பாவம், குட்டி நாய். மழையில் என்ன ஆச்சோன்னு கவலையாக இருந்தது. ராத்திரி துாக்கம் வராமல், நாய்குட்டியை நினைத்து அழுதேன். மறுநாள் பள்ளிக்கு போகும்போது பார்த்தால், விட்ட இடத்தில் நாய் குட்டி இல்லை.
அதுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ... மனசே சரியில்லை. அந்த நாய்க்குட்டி உயிருடன் இருக்குமா ஆன்ட்டி...
இப்படிக்கு,
- உஷா.
அன்பு உஷா,
நாய்க்குட்டிக்கு இரங்கும் உங்க மென்மையான அன்புள்ளம் கண்டு பெருமைப்படுகிறேன். இந்த உலகத்தில் எல்லாமே ஆண்டவனால் படைக்கப்பட்டது தான். நீ, நான், அந்த நாய்க்குட்டி எல்லாருமே தான். எப்படி உங்களை அப்பா, அம்மா காப்பாத்துறாங்களோ, அப்படி தான் கடவுள் படைச்ச உயிரினங்களை அவர் காப்பாத்துறார்.
ஒரு வேளை அந்த நாய்குட்டியை அதன் அம்மா வந்து துாக்கி போயிருக்கும். உங்களைப் போலவே இரக்கம் உள்ள, வேறு யாராவது துாக்கி சென்றிருப்பர்.
நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள், இயற்கை இடர்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வல்லமை படைத்தவை. அவற்றுக்கு ஆறறிவு இல்லாவிட்டாலும், நுண்ணறிவு படைத்தவை. மழை, வெயில் எல்லாவற்றிலும் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை பெற்றவை.
ஆகவே, உஷா... நாய்குட்டி குறித்த கவலையை விடு.
அப்பா கண்டிப்பானவர் என்பது தெரிந்தும், நீங்கள் இருவரும் நாயை துாக்கி வந்து உங்கள் அறையில் மறைத்து வைத்தது தப்பு தானே... அது என்ன பொம்மையா, வைத்த இடத்தில் இருக்க... சிலருக்கு சில விலங்குகளிடம் ஒவ்வாமை இருக்கும். அதன்படி உன் அப்பாவுக்கும் நாய்குட்டி பிடிக்காமல் போயிருக்கலாம்.
இனி இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், படிப்பில் அக்கறை காட்டுங்கள்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

