
அன்புள்ள அம்மா...
எனக்கு வயது 12; அரசு பள்ளி ஒன்றில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன். அடிக்கடி பழங்குடி மக்கள், மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் என்கிற வார்த்தையை பல இடங்களிலும் கேட்கிறேன். உலகில் இன்னுமா பழங்குடி மக்கள் இருக்கின்றனர். அவர்கள் நகரத்தில் வந்து ஐக்கியமாகி விடவில்லையா...
பழங்குடி மக்கள் இன்னும் காட்டில் இருந்தால் அவர்களின் தற்போதைய நிலை என்ன... விளக்கி சொல்லுங்கள்.
இப்படிக்கு,
ஆர்.என்.மகரன்கோ.
அன்பு மகனே...
நீ நினைப்பது முற்றிலும் தவறு. பழங்குடியின மக்கள் அல்லது மலைவாழ் மக்கள் முற்றிலும் பொது ஜனத்துடன் கலந்து விடவில்லை.
இந்தியாவின் ஜனத்தொகையில் 8.6 சதவீதம் அதாவது 10.4 கோடி பேர் பழங்குடிகளாக உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 342ம் பிரிவு பழங்குடி மக்களின் உரிமை மற்றும் நலன்களை பாதுகாக்கிறது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், 70 சதவீதம், மிசோராமில், 94.4 சதவீதம், குஜராத்தில், 15 சதவீதம், கோவாவில், 10.21 சதவீதம், தமிழகத்தில், 1 சதவீதம், ஆந்திராவில், 7 சதவீதம், சத்தீஸ்கரில், 30 சதவீதம் பழங்குடியின மக்கள் இருப்பதாக புள்ளி விபரம் உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவர்களின் கல்வியறிவை மேம்படுத்த முயற்சிக்கின்றன. மத்திய அரசிலும், மாநில அரசிலும் பழங்குடியின விவகாரங்களை கவனிக்கும் அமைச்சர்கள் உள்ளனர். பழங்குடியின மக்கள் நலனுக்காக மத்தியிலும், மாநிலத்திலும், ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அவற்றில் முக்கியமாக...
* ஆதி பிராசிக் ஷன்
* ஸ்வஸ்தியா
* தேசிய பழங்குடி ஆராய்ச்சி
* தன்னார்வ தொண்டு நிதி
* தேசிய பழங்குடி ஆய்வு உதவித்தொகை
* ஆதி பிராசரஸம் மற்றும் கூட்டு பழங்குடிமக்கள் முன்னேற்ற திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில், 88 லட்சம் பழங்குடியின மக்கள் உள்ளனர். அதில், 58 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். லட்சத்தீவில் பழங்குடியின மக்கள், 91.7 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளதாக புள்ளி விபரம் உள்ளது.
தமிழகத்தில் 39 வகை பழங்குடியினங்கள் உள்ளன.
மலையாளி, தோடர், குரும்பர், பளியர், இருளர், காட்டுநாயக்கர், படகர், கணிகர், காடர், பன்னியன், நரிக்குறவர், அதியன், இரவல்லன், கம்மாரா, கொச்சு, கொண்ட கப்புஸ், குருமன்ஸ், மகாமல்சார், மலையாகண்டி, மன்னன், முகுகர், ஷோலகா மற்றும் பல இனங்கள் உள்ளன.
இந்த மக்கள், முருகன், மாரியம்மன், அய்யனார், கருப்பசாமி, முனீஸ்வரர், திரவுபதி, மதுரை வீரன் என பல்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். மாசிமகம், பொங்கல், தைப்பூசம், கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் கொண்டாடுகின்றனர்.
நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களின் கல்வி தரத்தை உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வறுமையை அகற்ற, சுகாதார வசதிகளை மேம்படுத்த, குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த, மனநலத்தை பாதுகாக்க, மகப்பேறு இறப்பு மற்றும் ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளின் மரணம் மற்றும் ரத்தசோகை விகிதம் குறைக்கவும், விலங்கு சார்ந்த நோய்களை போக்கவும் பல திட்டங்களை வகுத்து செயல்படுகிறது தமிழக அரசு. தமிழக சினிமாவில் பிரபல நடிகை ஒருவர், -நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பது கொசுறு தகவல்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.