
அன்புள்ள அம்மா...
எனக்கு, 13 வயதாகிறது. தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன். சராசரிக்கு மீறிய உயரத்தில் வளர்ந்து உள்ளேன். என் பாட்டி, ஒவ்வொரு நாளும் சாமி படத்தின் முன் நின்று, 'இறைவா... என் பேரனை உயரமாய் வளரச் செய்யாதே... உயரமாக வளர்ந்தால் அவனது மூதாதையர் போல கூன் போட்டு நடப்பான்...' என வேண்டுதல் செய்கிறார்.
எனக்கோ, அதி உயரமாக வளர்ந்து கூடைப்பந்தாட்ட வீரனாகி சாதனை புரிய வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடலில் கூன் போடுவது பற்றி அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்து என் தரப்பு வாதத்தை வலுப்படுத்த உதவுங்கள்.
இப்படிக்கு,
ஆர்.தணிகலபரணி.
அன்பு மகனே...
உன் பாட்டி சொன்னதில் சிறிதளவு உண்மை இருக்கிறது. சில உயரமான நபர்களுக்கு, நெளிவு முதுகு அல்லது கொடு முதுகு பிரச்னை ஏற்படும். அதன் காரணமாக முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்து காணப்படும். எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டோர், சில அங்குலங்கள் உயரத்தில் குறைவர். உயரமாய் வளர்வது ஒரு சாபம் என்ற மனநிலை முற்றிலும் தவறானது.
ஓர் ஆணோ, பெண்ணோ கூன் போடுவதற்கான காரணங்களை பார்ப்போம்...-
* முதுகெலும்பு இடைவெளி வட்டுகள் சுருங்கி தட்டை ஏற்படுதல்
* கூன் போட்டு வளைவாக அமர்வது
* அதிக எடையுள்ள மூட்டையை சுமந்து செல்லுதல்
* தோரணையான வளைவு
* அசாதாரண வடிவ முதுகெலும்பு
* முதுகெலும்பு காயங்கள்
* உடையக்கூடிய எலும்பு நோய்
* நரம்பு மற்றும் தசை தொடர்பான சீர்குலைவு
* பேஜெட் எலும்புநோய்
* நாளமில்லா சுரப்பி ஹார்மோன் பிரச்னை
* எலும்புருக்கி நோய்
* இளம்பிள்ளைவாதம்
* தசைநார் சிதைவு நோய்
* கீல்வாதம்
* முதுகெலும்பு தொடரில் ஒரு பிறழ்வு
* இணைப்பு திசு ஒழுங்கீனம்
* முதுகெலும்பு பிளவு
* தலைமுறை தலைமுறையாக வரும் மரபியல் பிரச்னை என பல காரணங்களை கூறலாம்.
கூன் பிரச்னைக்குரிய காரணத்தை முதுகெலும்பு எக்ஸ்ரே, எலும்பு அடர்த்தி பரிசோதனை, எம்.ஆர்.ஐ., ஸ்கேன், நுரையீரல் இயக்க பரிசோதனை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
சுவாச பலவீனம், முதுகுவலி, கால் வெலவெலப்பு, அதிகம் தன்னைப்பற்றி யோசித்தல் கூனின் அறிகுறிகள்.
தொடர்ந்து மருந்து உட்கொண்டு, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை வாயிலாக கூன் பிரச்னையை போக்கலாம். கொசுவுக்கு பயந்து கோட்டையை காலி பண்ண முடியுமா... தொடர்ந்து தேவையான அளவு உயரம் வளர்ந்து கூடைப்பந்தாட்டத்தில் சாதிக்க முயற்சி செய்யவும்.
பிரபல எழுத்தாளர் சுஜாதா, உயரம் காரணமாக லேசாக கூன் போட்டபடி தான் நடப்பார் என்பது கொசுறு தகவல்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.