/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
குறை பிரசவத்திற்கு இதுவும் காரணமா?
/
குறை பிரசவத்திற்கு இதுவும் காரணமா?
PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

நெகிழிகளில் பயன்படும் 'தாலேட்'கள் என்ற ஒருவகை ரசாயனத்துக்கும், குறை பிரசவத்திற்கும் தொடர்புள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ரசாயனத்தால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
தாயின் கருவில் முழு வளர்ச்சி அடையாமல், குறைவான மாதங்களில் குழந்தை பிறந்தால் அதைக் குறை பிரசவம் என்று கூறுவோம். இவ்வாறு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் க்ராஸ்மேன் மருத்துவ பல்கலை., பத்தில் ஒரு குறை பிரசவம், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களில் சேர்க்கப்படும் 'தாலேட்'களால் தான் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வில் 5,000 கர்ப்பிணியர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் உடலில் இருந்த பல்வேறு 'தாலேட்'கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் ஒன்று டீஹெபி (DEHP : di-2-ethylhexyl phthalate). மிகவும் ஆபத்தான இந்த ரசாயனம் எந்தக் கர்ப்பிணியருக்கு அதிகம் இருந்ததோ அவர்களுக்கு, ரசாயனம் குறைவாக உள்ள பெண்களைக் காட்டிலும் குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 50 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இந்த ரசாயனம் பெரும்பாலும் உணவுப் பொருட்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் கவர்களில் தான் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் வாயிலாக மனித உடலுக்குள் செல்கிறது.
ஆகவே இதற்கு மாற்றாக ஆபத்து இல்லாத ரசாயனங்களை பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

