PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

உலகம் முழுவதும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தும் புற்றுநோய்களில், இரண்டாவது இடத்தில் இருப்பது குடல் புற்றுநோய். இது இளைஞர்களை அதிகமாகப் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு தரும் தகவலின் படி, அமெரிக்காவில் 2019ம் ஆண்டு மட்டும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் 55 வயதுக்குக் குறைவானவர்களே. இது, 1995ம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்ட நோயாளிகளை விட இரண்டு மடங்கு.
இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அதிகளவிலான பதப்படுத்தப்பட்ட, சிவப்பு இறைச்சிகளை (ஆடு, மாட்டிறைச்சி) உண்பது, இந்தப் புற்றுநோயை உருவாக்கும் என ஏற்கனவே சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அமெரிக்காவின் சதர்ன் கலிபோர்னியா பல்கலை கெக் மருத்துவ மையம் மேற்கொண்ட ஆய்வில், மரபணு வகைகளைப் பொருத்து, பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளின் சதவீதம் மாறுவதாகத் தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகளவு உண்பவர்களுக்கு, அவற்றை உண்ணாதவர்களைக் காட்டிலும் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 35 - 40 சதவீதம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. மரபணு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் உண்டாகும் குடல் புற்றுநோய் வாய்ப்பு, HAS2 மரபணு திரிபுகள் உடையவர்களுக்கு 38 சதவீதமும், SMAD7 மரபணு திரிபுகள் உடையவர்களுக்கு 18 சதவீதமும் பிறரை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
நாம் உண்ணும் உணவில் இருவிதமாக இரும்புச் சத்துகள் உள்ளன. அவற்றுள் 'ஹீம்' வகை இரும்புச் சத்து இறைச்சிகளில் அதிகமாக உள்ளது. அது, நம் உடல் செல்களால் உறிஞ்சப்படும் விதத்தை SMAD7 மரபணு திரிபுகள் மாற்றுகின்றன. இதுவே புற்றுநோயை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

