/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஈரோடு கிழக்கில் எந்த சமுதாயத்துக்கு ' ஜாக்பாட்? '
/
ஈரோடு கிழக்கில் எந்த சமுதாயத்துக்கு ' ஜாக்பாட்? '
ஈரோடு கிழக்கில் எந்த சமுதாயத்துக்கு ' ஜாக்பாட்? '
ஈரோடு கிழக்கில் எந்த சமுதாயத்துக்கு ' ஜாக்பாட்? '
PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, “அதிகாரிகளுக்கு துணை போக மறுத்துட்டாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பெண்ணக்கோணம் ஊராட்சி பெண் தலைவர், பொதுமக்களிடம் பணமோசடி செய்தாங்கன்னும், அதிகாரிகளிடம் அனுமதி வாங்காம வெளிநாடு போயிட்டு வந்துட்டதாகவும் புகார்கள் வந்துச்சுங்க...
“இதனால, 'செக்'ல கையெழுத்திடும் அவங்க அதிகாரத்தை பறிச்சு, மண்டல டெபுடி பி.டி.ஓ.,கிட்டபோன வருஷமே குடுத்துட்டாங்க... உள்ளாட்சிகளின் பதவிக்காலம் ஜனவரி 5ல முடிய போகுதுங்க...
“இந்த ஊராட்சியில 15வது நிதிக்குழு மானியம், பொது நிதின்னு 10 லட்சம் ரூபாய்க்கு மேல இருக்கிறதால, தனியார் நிறுவனத்திடம் கை பம்பு பொருட்கள், தெரு விளக்கு உபகரணங்கள், பிளீச்சிங் பவுடர் வாங்கியதா, 5.16 லட்சம் ரூபாய்க்கு போலி பில் தயாரிச்சு, பணத்தை, 'ஆட்டை' போட அதிகாரிகள் முயற்சி செஞ்சாங்க...
“ஆனா, அதுக்கான, 'செக்'ல கையெழுத்து போட ஊராட்சியின் பெண் துணை தலைவர் மறுத்துட்டாருங்க... இதனால, அதிகாரிகள் தரப்பு நொந்து போயிடுச்சுங்க...” என்றார், அந்தோணிசாமி.
“தினமும், 12,000 ரூபாய் வாடகையாமுல்லா...” என, அடுத்த தகவலுக்கு தடம் மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருநெல்வேலி மாநகராட்சி ஊழியர் ஒருத்தர், சமீபத்துல அலுவலக வேலையா சென்னைக்கு போயிருக்கார்... தினமும், 12,000 ரூபாய் வாடகை வசூலிக்கிற ஸ்டார் ஹோட்டல்ல மூணு நாள் தங்கியிருக்காரு வே...
“மாநகராட்சி சம்பந்தமான முக்கிய பைல்கள்ல, நகராட்சி உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்க தான், இவரை அனுப்பி வச்சிருக்காவ... 36,000 ரூபாய் வாடகை குடுத்து தங்கியிருக்காருன்னா, அந்த பைல்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும்னு பார்த்துக்கிடுங்க வே...
“கையெழுத்து வாங்க வந்த ஊழியரும் லேசுப்பட்டவர் இல்ல... அனுமதி பெறாத கட்டடங்களின் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதா, உயர் அதிகாரிகளிடம் ரெண்டு முறை சிக்கியவர் தான்... 'நெல்லை மாநகராட்சியில வளம் கொழிக்கு'ன்னு அதன் ஊழியர்களே பேசிக்கிடுதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“எந்த சமுதாயத்துக்கு, 'ஜாக்பாட்' அடிக்க போறதுன்னு தெரியல ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க போறதோல்லியோ... பிப்ரவரியில நடக்க போற டில்லி சட்டசபை தேர்தலுடன், இந்த இடைத்தேர்தலும் நடக்கும்னு சொல்றா ஓய்...
“இதுல, 'மறைந்த காங்., மூத்த தலைவர் இளங்கோவனின் மனைவி வரலட்சுமி அல்லது மகன் சஞ்சய் சம்பத் நிறுத்தப்படலாம்'னு சிலர் சொல்றா... இன்னொரு பக்கம், 'தி.மு.க.,வே நிற்கும்'னு சிலர் சொல்றா ஓய்...
“தி.மு.க., நின்னா, முதலியார் சமூகத்துக்கு வாய்ப்பு தரணும்னு முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட துணை செயலர் செந்தில்குமார்னு பலரும் முதல்வரின் மருமகனை மொய்க்கறா... கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவாளோ, 'இத்தொகுதியை நம்ம சமுதாயத்துக்கு கேட்டு வாங்கணும்'கறா... இதுக்கு மத்தியில, தனக்கு அடங்கி போற ஒருத்தரை வேட்பாளரா நிறுத்த, அமைச்சர் முத்துசாமி தனியா காய் நகர்த்திண்டு இருக்கார் ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் பேச்சு முடிவுக்கு வர, பெஞ்ச் காலியானது.

