/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'மாஜி' சபாநாயகர் மகனுக்கு, 'சீட்' வழங்க கடும் எதிர்ப்பு!
/
'மாஜி' சபாநாயகர் மகனுக்கு, 'சீட்' வழங்க கடும் எதிர்ப்பு!
'மாஜி' சபாநாயகர் மகனுக்கு, 'சீட்' வழங்க கடும் எதிர்ப்பு!
'மாஜி' சபாநாயகர் மகனுக்கு, 'சீட்' வழங்க கடும் எதிர்ப்பு!
PUBLISHED ON : டிச 26, 2025 03:40 AM

இ ஞ்சி டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''சத்தமில்லாம பதுங்கிட்டாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கிற குப்பையை, சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்டுறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்துறாங்களே... இதுல, பொதுமக்களுக்கு ஆதரவா, சில கல் குவாரி உரிமையாளர்களும் கலந்துக்கிட்டாங்க...
''இதனால, கடுப்பான உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள், கல் குவாரி உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, 'பிரச்னையில்லாம தொழில் நடத்தணுமா, வேண்டாமா'ன்னு மிரட்டி இருக்காங்க...
''இதனால, பயந்து போன குவாரி உரிமையாளர்கள், இப்ப போராட்டம் நடக்கிற திசை பக்கம் திரும்பிக்கூட பார்க்கிறது இல்லைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எதையுமே கண்டுக்காம இருக்காவ வே...'' என, அடுத்த தகவலை, பெரியசாமி அண்ணாசியே தொடங்கினார்...
''ராமநாதபுரம் மாவட்ட, தி.மு.க., செயலரான காதர் பாட்ஷா, ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் இருக்காரு... இங்க, இன்னும் பாதாள சாக்கடையை முறையா அமைக்காம, மக்கள் சிரமப்படுதாவ வே...
''குடிநீரில் கழிவுநீர் கலந்து வருது... சாக்கடை பராமரிப்புக்கு பல கோடி ரூபாயை செலவு செஞ்சதா, நகராட்சி நிர்வாகம் கணக்கு காட்டுதே தவிர, அப்படி எந்த பணியும் நடந்த மாதிரி தெரியல வே ...
''மொத்தம், 20 கோடி ரூபாய்ல கட்டின புது பஸ் ஸ்டாண்ட்லயும், உருப்படியா எந்த வசதியும் இல்ல... ஆனா, இங்க கடைகள் ஒதுக்க, மாவட்டச் செயலர் பெயர்ல, ஆளுங்கட்சியினர் பல லட்சம் ரூபாயை வசூல் பண்ணிட்டாவ வே...
''ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 10 மாசங்களா அம்மா உணவகம் மூடியே கிடக்கு... இதை எல்லாம் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்த வேண்டிய எதிர்க்கட்சிகளான, அ.தி.மு.க., - பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் எல்லாம், பரமக்குடி, ராமேஸ்வரத்தில் இருக்கிறதால, எதையும் கண்டுக்கிறது இல்ல... இதனால, 'இந்த முறையும் ராமநாதபுரத்தில் ஜெயிச்சிடுவோம்'னு தி.மு.க.,வினர் தெம்பா வலம் வர்றாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''சீட் குடுத்தா தோல்வி உறுதின்னு சொல்றா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''யாருக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், அவிநாசி - தனி தொகுதி எம்.எல்.ஏ.,வா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால் இருக்கார்... சட்டசபை தேர்தல்ல இந்த தொகுதியில் களமிறங்க, இவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், விருப்ப மனு குடுத்திருக்கார் ஓய்...
''போன, 2016ல் இருந்து இங்க எம்.எல்.ஏ.,வா இருக்கற தனபால், மூணு வருஷமா தொகுதி பக்கமே வரல... உடல்நிலையை காரணம் காட்டி, எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்காம, சொந்த ஊரான சேலத்துலயே இருக்கார் ஓய்...
''இதனால, அவிநாசி தொகுதி மக்கள், அ.தி.மு.க., மேல அதிருப்தியில இருக்கா... அதுவும் இல்லாம, 'தி.மு.க.,வில் வாரிசு அரசியல்னு குற்றஞ்சாட்டுற நாமளே, வாரிசு அரசியல் பண்ணலாமா... இங்க லோகேஷுக்கு சீட் குடுத்துட்டா, இந்த தொகுதியை நாம மறந்துட வேண்டியது தான்'னு, கட்சி தலைமைக்கு, உள்ளூர் அ.தி.மு. க.,வினர் கடிதம் அனுப்பி இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

