PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் மல்லை சத்யா பேச்சு:
எழுத்தாளர்கள்
படைக்கும் நுால்களுக்கு தள்ளுபடி விலை, சலுகை விலைன்னு எல்லா விலையிலும்
தள்ளுபடி கொடுத்தும், இறுதியில் இலவசமாக கொடுக்கிற நிலைமை தான்
எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. இதில், ஒரு சில எழுத்தாளர்கள், விதி
விலக்காக இருக்கலாம். பெரும்பாலான எழுத்தாளர்கள், பொருளாதார ரீதியில் பல
சங்கடங்களை அனுபவித்து வருகின்றனர்.
கட்சி நிகழ்ச்சிகளில், 'சால்வைக்கு பதில் புத்தகத்தை பரிசா தாங்க'ன்னு அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் சரியா கடைப்பிடிச்சாலே போதும்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: நேதாஜியை எப்படி குறிவைத்து காங்கிரஸ் வீழ்த்தியதோ, அதே போல, அம்பேத்கரையும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக விடாமல் தடுப்பதற்காகவே, அவருக்கு சாதகமாக இருந்த மாவட்டங்களை, பாகிஸ்தான் பக்கம் ஒதுக்கி விட்டவர், அப்போதைய பிரதமர் நேரு. அதுமட்டுமல்ல, 1952ல், வடக்கு மும்பை தொகுதியிலும், 1954ல், பந்த்ரா பார்லிமென்ட் தொகுதியிலும், அம்பேத்கரை திட்டமிட்டு தோற்கடித்ததும் காங்கிரஸ் தான்.
அப்ப செஞ்ச பாவத்துக்கு, இப்ப கூட பிராயச்சித்தம் தேடாம, பா.ஜ.,வை சாடுறாங்களே!
தமிழக, பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேங்கைவயலில், பட்டியலினத்தவர் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்கள் யார் என்று, இதுவரை கண்டுபிடித்து தண்டிக்காதது தான் மிகப்பெரிய பாவம். நாட்டை, மக்களை பற்றி, நம் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு தந்துள்ள பாதுகாப்பு, உரிமை குறித்து கவலைப்பட்டிருந்தால், இந்நேரம் வேங்கைவயல் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டித்திருப்பீர்கள்.
வேங்கைவயல் விவகாரம் அரசுக்கு மட்டுமல்ல, 'ஸ்காட்லாந்து யார்டு'க்கு இணையான நம்ம போலீசுக்கும் ஒரு இழுக்கு தான் என்பதை, முதல்வர் உணர வேண்டும்!
தமிழக, காங்., விவசாய பிரிவு மாநில செயலர், ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: சட்டமேதை அம்பேத்கர் குறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து, நாட்டையே போராட்ட களத்தில் தள்ளியுள்ள நிலையில், அதை திசைதிருப்ப, மத்திய அரசின் ஏவுதலில், ராகுலை பலிகடா ஆக்க முயற்சி செய்கின்றனர். ராகுல் மீது, பா.ஜ., இதற்கு முன் கொடுத்த நெருக்கடிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன; இதுவும் தோல்வியை தான் தரும்.
அது தோல்வியில் முடியுதோ, இல்லையோ... அமித் ஷாவுக்கு எதிரான போராட்டம் இதனால தோல்வியில் முடியுமா?

