PUBLISHED ON : ஏப் 07, 2026 03:19 AM

ட பராவில், பில்டர் காபியை ஆற்றியபடியே, ''விவசாயிகளை ஏமாத்தறா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஊட்டியில், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படறது... இதுல, 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினரா இருக்கா ஓய்...
''இவா கொண்டு வர்ற காய்கறிகளை, வியாபாரிகள் ஏலத்துல எடுத்துண்டு போவா... இந்த காய்கறிகளுக்கு, கூட்டுறவு சங்க ஊழியர்கள் தான், ஏலத்தொகை நிர்ணயம் பண்றா ஓய்...
''அவா, வியாபாரிகளிடம், 'கட்டிங்' வாங்கிண்டு, ஏலத்தொகையை குறைவா நிர்ணயம் பண்ணி, விவசாயிகளை ஏமாத்தறா... இது பத்தி, கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம், விவசாயிகள் புகார் குடுத்தும், நடவடிக்கை இல்ல... இதனால, 'ஊழியர்கள் வாங்கற கமிஷன்ல, அவாளுக்கும் பங்கு போறதோ'ன்னு விவசாயிகள் சந்தேகப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சசிகலா கட்சியே, இவரது ஆலோசனையில தான் நடக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''பிரபல ரவுடி வீரமணி உட்பட, 12 பேரை, 'என்கவுன்டர்'ல சுட்டு தள்ளிய, போலீஸ் அதிகாரி வெள்ளதுரையை தெரியுமுல்லா... பணியில இருந்தப்ப, பல சர்ச்சைகள்ல சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆகி, திரும்பவும் பணியில சேர்ந்தாரு வே...
''கூடுதல் எஸ்.பி.,யாகி, 2024ல் பணி ஓய்வுல போனாரு... ஜெ.,யின் முன்னாள் தோழி, சசிகலா சமீபத்துல துவங்கிய, அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில், வெள்ளதுரை சேர்ந்திருக்காரு வே...
''துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த இவர், சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவர்... இவரை, நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி வேட்பாளரா, சசிகலா நிறுத்தியிருக்காங்க வே...
''கட்சி சம்பந்தமான எல்லா முடிவுகளையும், வெள்ளதுரையிடம் கேட்டு தான் சசிகலா எடுக்காங்க... கட்சியின் வரவு - செலவு விவகாரங்களைக் கூட, வெள்ளதுரை தான் பார்த்துக்கிடுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''எப்படி பொய் கணக்கு எழுதணும்னு, திருப்பூர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிஞ்சிக்கலாம் பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின், மூணாவது மாடியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை, சமீபத்துல அந்தந்த தாலுகாக்களுக்கு அனுப்பி வச்சாங்க... இந்த பெட்டிகளை ஏற்றவும், இறக்கவும் தொழிலாளர்களுக்கு கூலி வழங்க, தேர்தல் கமிஷன் சார்பில், நிதி ஒதுக்கியிருக்காங்க பா...
''ஆனா, கூலி தொழிலாளர்களை அழைக்காம, வி.ஏ.ஓ.,க்கள், அவங்க உதவியாளர்கள், தாலுகா அலுவலக ஊழியர்களை வச்சே பெட்டிகளை ஏற்றி அனுப்பிட்டாங்க... இதுல, சில அலுவலர்கள், மூத்த வி.ஏ.ஓ.,க்கள் எல்லாம் பேருக்கு ஒன்றிரண்டு பெட்டிகளை மட்டும் லாரிகள்ல வச்சுட்டு, சத்தமில்லாம ஒதுங்கிட்டாங்க பா...
''கிராம உதவியாளர்களா இருக்கும் பல பெண்கள் தான், கடைசி வரைக்கும் இருந்து, எல்லா பெட்டிகளையும் லாரிகள்ல ஏத்தினாங்க... அதே நேரம், பெட்டிகளை ஏத்தி, இறக்கிய செலவுன்னு ஒரு பெரும் தொகையை கணக்கு எழுதி, அந்த பணத்தை அதிகாரிகள் சுருட்டிட்டாங்க... எல்லா தேர்தல்கள்லயும் இப்படி பல லட்சம் ரூபாயை சுருட்டிடுறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
