/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மீன் மார்க்கெட் வாடகை வசூலில் முறைகேடு!
/
மீன் மார்க்கெட் வாடகை வசூலில் முறைகேடு!
PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

நா ட்டு சர்க்கரை டீயை ருசித்தபடியே, ''கண்டிப்பா கலந்துக்கிறதா வாக்கு குடுத்திருக்காங்க வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசின், 'செல்வ மகள்' சேமிப்பு திட்டம் இருக்குல்லா... கோவை தெற்கு ரோட்டரி சங்கம் சார்புல, தபால் துறையில், 2,000க்கும் மேற்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகளை துவங்கி, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்காவ வே...
''இதில் கலந்துக்கணும்னு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், விவசாய அணியின் மாநில தலைவர், ஜி.கே.நாகராஜ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பார்த்து, அழைப்பிதழ் குடுத்திருக்காவ... அவங்க முயற்சியை பாராட்டிய நிர்மலா சீதாராமன், 'கண்டிப்பா விழாவுல கலந்துக்க தேதி தர்றேன்'னு சொல்லியிருக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
''உளவுத்துறை போலீசார் சொதப்பிய கதையை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சமீபத்தில், மறைந்த தலித் தலைவர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அனுசரிச்சால்லியோ... இதுக்கு, சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுகாவில் இருந்து அவரது ஆதரவாளர்கள் எத்தனை பேர் அஞ்சலி செ லுத்த போவாங்கன்னு, எஸ்.பி.,யின் உளவுத்துறை போலீசார் கணக்கெடுத்து அறிக்கை குடுத்தா ஓய்...
''பரமக்குடிக்கு, சொந்த வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அப்போது அனுமதி கிடையாதுங்கறதால, அஞ்சலி செலுத்த போறவாளுக்கு அரசு பஸ்களை ஏற்பாடு செய்து தருவா... 'இந்த வருஷம், திருபுவனம் தாலுகாவுக்கு, 21 பஸ்கள் தேவைப்படும்'னு உளவுத்துறை போலீசார் அறிக்கை குடுத்திருந்தா ஓய்...
''அந்த வகையில், 21 பஸ்களும், ஒரு பஸ்சுக்கு ரெண்டு போலீசார் வீதம்னு, திருச்சி மாவட்ட போலீசாரை வரவழைச்சிருந்தா... ஆனா, ஒன்பது பஸ்களில் மட்டும் தான் அவரது ஆதரவாளர்கள் போயிருக்கா... மீத, 12 பஸ்கள்லயும் டீசல் நிரப்பி, டிப்போவில் தயாரா நிறுத்தி வச்சிருந்தா ஓய்...
''உளவுத்துறை போலீசார் களத்துக்கு போய் தகவல் சேகரிக்காம, போன வருஷ நிலவரத்தை வச்சு தந்த அறிக்கையால, அரசு பஸ்களுக்கு டீசல் செலவும், திருச்சி மாவட்ட போலீசாருக்கு வெட்டி அலைச்சலும் தான் மிச்சம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தனித்தனியா வசூல் பண்ணி கொள்ளை அடிக்கிறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தஞ்சாவூரில், தற்காலிக மீன் மார்க்கெட்டை குத்தகைக்கு எடுத்துள்ள ஒப்பந்ததாரர், தினமும் கடைகளுக்கு, 100 ரூபாய் வீதம் வாடகை வசூல் பண்றாருங்க... அந்த பணத்துல தான் வியாபாரிகளுக்கு தண்ணீர், மின்சார வசதி எல்லாம் செய்து தரணும்கிறது மாநகராட்சியின் விதி...
''ஆனா, ஒப்பந்ததாரர் மின்சாரம், தண்ணீருக்குன்னு வியாபாரிகளிடம் தனியா பணம் வசூலிக்கிறாருங்க... சில வியாபாரிகள், தனியா ஜெனரேட்டர் ஏற்பாடு பண்ணியிருக்காங்க...
''ஆனா, தனக்கு பணம் தராம அதை பயன்படுத்தக் கூடாதுன்னு ஒப்பந்ததாரர் பிரச்னை பண்றாருங்க... மாநகராட்சி கமிஷனர், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் எல்லாம் இதை கண்டுக்காம இருக்கிறதால, மீன் வியாபாரிகள் நொந்து போயிருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''ரபீக் இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.