/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தி.மு.க., கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை 'சீட்?'
/
தி.மு.க., கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை 'சீட்?'
தி.மு.க., கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை 'சீட்?'
தி.மு.க., கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை 'சீட்?'
PUBLISHED ON : நவ 28, 2025 12:00 AM

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''வசூலை வாரி குவிக்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடக்கிற பணிகளை எடுத்து செய்ற கான்ட்ராக்டர்களிடம், இன்ஜினியரிங் பிரிவுல பணியாற்றும் ஊழியர் ஒருத்தர், கறாரா கமிஷன் வாங்கிடுறாருங்க...
''சாலை அமைக்கிறது, கட்டடம் கட்டுறது, அரசு குடியிருப்பு மராமத்து பணிகள்னு எல்லாத்துலயும், தலா ஒரு சதவீதம் கமிஷனை, 'மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு வழங்கணும்'னு ஊழியர் கேட்டு வாங்குறாருங்க...
''இது, நிஜமாவே உயர் அதிகாரிகளுக்கு தான் போகுதா அல்லது அவங்க பெயரை சொல்லி, இவர் வாங்கி பாக்கெட்டுல போட்டுக்கிறாரான்னு தான் தெரியலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''குமார், இதையும் கேட்டுட்டு போங்க...'' என நண்பரை இழுத்து பிடித்த அன்வர்பாய், ''போக்குவரத்து கழகத்தை பழி வாங்கிட்டாங்க பா...'' என்றார்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார்ல லேசான மழை பெய்ஞ்சாலே, அங்க இருக்கும் அரசு பஸ் டிப்போவுக்குள்ள தண்ணீர் தேங்கிடும்... டிப்போ இருக்கிற இடம், வீரபாண்டியபட்டினம் பஞ்சாயத்துல வருது பா...
''தண்ணீரை வெளியேற்றும்படி அதிகாரிகள் கேட்டாலும், பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுக்கிறது இல்ல... இதனால, தண்ணீர்ல நடந்து ஊழியர்கள் அவதிப்படுறாங்க பா...
''பஞ்சாயத்து நிர்வாகம் ஏன் கண்டுக்கல தெரியுமா... அவங்களுக்கு, 49 லட்சம் ரூபாய் வரியை டிப்போ நிர்வாகம் பாக்கி வச்சிருக்காம்... அதாவது, வருஷத்துக்கு, 7 லட்சம் ரூபாய் தொழில் வரியை, கடந்த ஏழு வருஷங்களா டிப்போ நிர்வாகம் பஞ்சாயத்துக்கு கட்டவே இல்ல பா...
''இப்படி, 'மொத்தம், 49 லட்சம் ரூபாய் வரி பாக்கி வச்சிருக்கிறதால தான், டிப்போவுல தேங்கும் தண்ணீரை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காம பழிவாங்குது'ன்னு உள்ளூர் மக்கள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கமல் கட்சிக்கு ரெண்டு சீட் தரப் போறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''தி.மு.க., கூட்டணி தகவலா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஆமா... மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டத்தை சமீபத்துல, திருச்சி, திருவெறும்பூர்ல நடத்தினாரோல்லியோ...
''பிரபல தொழிலதிபர் முருகானந்தம், இங்க கமல் கட்சி சார்புல நிற்பார்னு சொல்றா... இதுக்கு முன்னோட்டமா, வர்ற டிசம்பர்ல திருவெறும்பூர்ல கமலை வச்சு ஒரு விழா நடத்த, முருகானந்தம் திட்டமிட்டிருக்கார் ஓய்...
''ஒருவேளை முருகானந்தம் நிற்கலன்னா, கவிஞர் சிநேகன் நிற்பார்னு சொல்றா... 'இந்த தொகுதியின் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான அமைச்சர் மகேஷ், திருச்சி கிழக்கு அல்லது சென்னையில ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார்'னும் அவரது ஆதரவாளர்கள் சொல்றா ஓய்...
''அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கியதுல இருந்து, தன் கூடவே இருக்கற ஓய்வு பெற்ற ஐ.ஜி., மவுரியாவுக்கு, ஒரு தொகுதியை வாங்கித் தர, கமல் முடிவு பண்ணியிருக்காராம்... எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா, கமல் கட்சிக்கு ரெண்டு சீட்களை தி.மு.க., ஒதுக்கும்னு தெரியறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

