/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இரட்டை பதவியில் கொழிக்கும் மாநகராட்சி அதிகாரி!
/
இரட்டை பதவியில் கொழிக்கும் மாநகராட்சி அதிகாரி!
PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''பா.ஜ., நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்த பின்னணி தெரியுமா வே...'' என கேட்டு, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை, பீளமேடு ஏரியாவுல பா.ஜ., நிர்வாகியான அஜய் என்பவரை சமீபத்துல ரெண்டு பேர் அரிவாளால வெட்டிட்டாவ... நல்லவேளையா, அவர் காயத்தோட தப்பிச்சிட்டாரு வே...
''அங்க ரெண்டு போலீஸ் அதிகாரிகள் வேலை பார்க்காவ... இவங்களுக்கு, 'குட்கா' புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க ரெண்டு, 'இன்பார்மர்'கள் இருக்காவ வே...
''இதுல ஒருத்தரும், போலீஸ் அதிகாரிகள்ல ஒருத்தரும் சேர்ந்து, பிடிபடுற புகையிலை பொருட்கள்ல குறிப்பிட்ட அளவை பதுக்கி, தங்களுக்கு தெரிஞ்ச கடைகள்ல வித்துடுவாவ...
''இந்த தகவலை கேள்விப்பட்ட அஜய், இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் சொல்லிட்டாரு... இதனால, கடுப்பான பதுக்கல் அதிகாரி ஏற்பாட்டுல, அஜய்க்கு வெட்டு விழுந்துச்சுன்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''செந்தில் இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாயே, ''பணத்தை சுருட்டிட்டாங்க பா...'' என்றார்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியமா வழங்க தமிழக அரசு உத்தரவு போட்டுச்சு...
'' இதுல, தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரங்கள்ல, ஒரு வேளாண் அலுவலருக்கு, 400 ஏக்கர் வீதம், ஆறு வேளாண் அலுவலர்களுக்கு, 2,400 ஏக்கர் நிலத்துக்கான பணத்தை ஒதுக்குனாங்க பா...
''இதுல, 800 விவசாயிகளுக்கு முழு தொகையான, 4,000 ரூபாயை, அவங்க வங்கி கணக்குல அதிகாரிகள் வரவு வச்சுட்டாங்க... அதே நேரம், அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்துட்டதால, 'எல்லா விவசாயிகளுக்கும் பணம் தரணும்'னு சொல்லி, 4,000க்கு பதிலா 3,200, 2,800 ரூபாய்னு பிரிச்சு குடுத்திருக்காங்க... இதுல, சில வேளாண் அலுவலர்கள் பணம் பார்த்துட்டதா சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ரெண்டு பதவிகள்ல இருந்து புகுந்து விளையாடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்தின் உதவி செயற் பொறியாளர், 'மெடிக்கல் லீவ்'ல போயிருக்கார்... திடக்கழிவு மேலாண்மை துறையில் இருந்த உதவி செயற்பொறியாளர், தன் செல்வாக்கை பயன்படுத்தி இந்த பதவிக்கு வந்துட்டார் ஓய்...
''இதுக்கு இடையில, கடந்த ஒரு வருஷமா பெருங்குடி மண்டலத்துல காலியாக இருக்கும் செயற்பொறியாளர் பதவியை, அதே மண்டலத்தில் பணிபுரியும் மற்றொரு செயற்பொறியாளர் கூடுதல் பொறுப்பா கவனிச்சுண்டு இருந்தார்...
''பெருங்குடி உதவி செயற்பொறியாளர், பார்க்க வேண்டியவாளை பார்த்து, அந்த பொறுப்பு பதவியையும் கூடுதலா தனக்கு வாங்கிண்டார் ஓய்...
''பொதுவா, செயற்பொறியாளர் பொறுப்பு பதவியை, உதவி கமிஷனர் அல்லது மற்றொரு செயற்பொறியாளர் தான் கவனிக்கணும்... அதுக்கு கீழ் நிலையில இருக்கற அதிகாரி, உயர்நிலை பதவியையும் பார்க்கறதால, 'டபுள் வருமானம்' கொட்றது ஓய்...
''அதே நேரம், வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்காம்... இதனால, 'காலியா இருக்கற செயற்பொறியாளர் பதவிக்கு உடனே அதிகாரியை நியமிக்கணும்'னு, அந்த பகுதியில இருக்கற சமூக நல ஆர்வலர்கள் சொல்றா ஓய்...'' என, 'மோகன'மாக சிரித்த படியே முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.