/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூட்டுறவு துறை உதவியாளர்கள் நியமனத்தில் 'கோல்மால்!'
/
கூட்டுறவு துறை உதவியாளர்கள் நியமனத்தில் 'கோல்மால்!'
கூட்டுறவு துறை உதவியாளர்கள் நியமனத்தில் 'கோல்மால்!'
கூட்டுறவு துறை உதவியாளர்கள் நியமனத்தில் 'கோல்மால்!'
PUBLISHED ON : டிச 13, 2025 03:04 AM

“அ திகாரி மீது குற்றம்சாட்டுதாங்க வே...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த அதிகாரியை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏத்தலாம்னு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு போட்டுச்சுல்லா... இதை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அறநிலையத் துறை துணை கமிஷனரான யக்ஞ நாராயணன் கண்டுக்கல வே...
“இதே யக்ஞநாராயணன் தான், மதுரை அழகர் கோவில்ல இருக்கும் கள்ளழகர் கோவிலுக்கும் துணை கமிஷனரா இருக்காரு... 'அழகர் கோவில் மலைப்பாதையில் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது'ன்னு, உயர் நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவு போட்டுச்சு வே...
“இந்த உத்தரவு வந்த அன்னைக்கே, வாகனங்கள் போறதுக்கு யக்ஞநாராயணன் தடை விதிச்சிட்டாரு... ஆனா, 'திருப்பரங்குன்றம் விஷயத்தில் மட்டும், ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப அவர் நடந்திட்டிருக்காரு'ன்னு உள்ளூர் பக்தர்கள் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“அ.தி.மு.க., நிர்வாகிக்கு எதிரா போஸ்டர் ஒட்டியிருக்கா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு தனியார் மருத்துவ கல்லுாரி இருக்கு... 'நீட்' தேர்வில் குறைவான மார்க் எடுத்த மாணவர்களுக்கு, 'கேரள வம்சாவழி மைனாரிட்டி' என்ற போலி சான்றிதழை, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி ஒருத்தர் வாங்கி குடுத்து, தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்த்து விட்டிருக்கார் ஓய்...
“இப்படி போலி சான்றிதழ்கள் வழங்க, தாலுகா அலுவலக அதிகாரிகளும் உடந்தையா இருந்திருக்கா... இப்படி, பல கோடிகளை அ.தி.மு.க., நிர்வாகி சம்பாதிச்சிருக்கார் ஓய்...
“இப்ப, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கு... சமூக நீதி மாணவர் பேரவை சார்பில், 'அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி, 100 கோடி ரூபாய் சுருட்டல்; தமிழக அரசே நடவடிக்கை எடு'ன்னு கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்கா...
''இது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கவனத்துக்கு வர, நிர்வாகி பத்தி விசாரிக்கும்படி, கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்கார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“சுதர்சன், இதையும் கேட்டுட்டு போங்க...” என, நண்பரிடம் கூறிய அன்வர்பாய், “மறுபடியும் தேர்வு நடத்துங்கன்னு கேட்கிறாங்க பா...” என்றார்.
“எந்த தேர்வை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“தேனி மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் காலியா இருக்கும் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, அக்டோபர், 17ல் எழுத்து தேர்வு நடந்துச்சு... ஒரே மாசத்துல தேர்வு முடிவுகளை வெளியிட்டு, நவம்பர், 26ல் நேர்காணலும் நடத்திட்டாங்க பா...
“இப்ப, வேலைக்கு தேர்வான, 30க்கும் மேற்பட்டவங்க பட்டியலும் வெளியாகிடுச்சு... இதுல, 18க்கும் மேற்பட்டோர், கூட்டுறவு துறையில பணியில் இருக்கிறவங்களின் உறவினர்கள் தான் பா...
“இவங்க எல்லாம், கூட்டுறவு துறை அதிகாரிகளை, 'கவனிச்சு' முன்னதாகவே, தேர்வுக்கான வினாத்தாளை வாங்கி நல்லா படிச்சிட்டு வந்து தேர்வு எழுதியிருக்காங்க... இதனால, 'மறுபடியும் தேர்வு நடத்தி, நேர்மையா பணி நியமனங்களை செய்யணும்'னு வாய்ப்பு கிடைக்காதவங்க புலம்புறாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

