PUBLISHED ON : ஏப் 09, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: கடந்த 2021
சட்டசபை தேர்தல் நேரத்தில், 'அ.தி.மு.க., நிதி நெருக்கடியில் அரசை விட்டு
சென்றுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற
இயலாது' என தி.மு.க., தெரிவித்திருந்தால் வரவேற்றிருக்கலாம். 'நாங்கள்
ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம்' எனக் கூறிய
தி.மு.க., அப்போது நிதி நிலைமை குறித்து எதுவும் பேசவில்லை.
அப்போதைய அவர்களின் ஒரே நோக்கம், ஆட்சியை கைப்பற்றுவது தானே... அப்ப, நிதி நிலை பற்றி எல்லாம் ஏன் யோசிக்க போறாங்க?
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேச்சு: தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, சமீப காலமாக அடிக்கடி வருகிறார். வரும், 2026 சட்டசபை தேர்தல் வரை தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட, அவர்களால் டிபாசிட் கூட வாங்க முடியாது.
அவங்க டிபாசிட் வாங்குறாங்களோ, இல்லையோ... இவரது கட்சியினர் பலர் முன்ஜாமினுக்கும், பின் ஜாமினுக்கும் அலைவாங்க என்பதில் சந்தேகமில்லை!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். தமிழ் ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, வைகோ கோரியிருப்பது, காங்கிரஸ் கட்சியினரின் உணர்ச்சிகள் மரத்து போய் விட்டதை உணர்த்துகிறது. உலகிலேயே சொந்த கட்சி தலைவரை கொன்ற கும்பலை பாராட்டுபவர்களோடும், அரவணைத்து மகிழ்பவர்களோடும், பதவிக்காக கூட்டணி அமைத்திருப்பது, காங்கிரஸ் கட்சியினராகத்தான் இருக்க முடியும்.
வைகோ கட்சியின் தேர்தல் அறிக்கையை, அவரது கட்சியினரே சீரியசா எடுத்துக்க மாட்டாங்க... இவர் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படணும்?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: எல்லாரும் ஓட்டு கேட்கின்றனர் என்றால், ஓ.பி.எஸ்., ஒருவர் மட்டுமே, ஓட்டோடு சேர்த்து, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, சேது சீமை மக்களிடம் நீதியும் கேட்கிறார். நீதிக்கு சாட்சியாகி இன்றளவும் நிற்கும் முகவை, முறை தவறா முன்னாள் முதல்வருக்கு பரிவட்டமும் கட்டும்.
பரிவட்டம் கட்டுறாங்களோ இல்லையோ... கட்டிய டிபாசிட் தொகையை திருப்பி தர்றாங் களான்னு முதல்ல பாருங்க!

