/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பட்டுவாடா பணத்தில் 'ஏசி' வாங்கும் கட்சி நிர்வாகிகள்!
/
பட்டுவாடா பணத்தில் 'ஏசி' வாங்கும் கட்சி நிர்வாகிகள்!
பட்டுவாடா பணத்தில் 'ஏசி' வாங்கும் கட்சி நிர்வாகிகள்!
பட்டுவாடா பணத்தில் 'ஏசி' வாங்கும் கட்சி நிர்வாகிகள்!
PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

''கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியிருக்காங்க பா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்த கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக மின் வாரியத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகள் சாராத பல தொழிற்சங்கங்கள் இருக்குது... சென்னை, தலைமை அலுவலகத்தின் எட்டாவது மாடியில் நிர்வாக பிரிவு இயங்குது பா...
''இங்க அடிக்கடி வர்ற ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த நாலு பேர், 'நாங்க சொல்றவங்களுக்கு இடமாறுதல் போடணும்... அதுவும், நாங்க சொல்ற இடத்துல தான் நியமிக்கணும்'னு அதிகாரிகளுக்கு நெருக்கடி தர்றாங்க பா...
''இவங்களால பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் தெரிவிச்சாலும், ஆளுங்கட்சி சங்கத்தினரா இருக்கிறதால, நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குறாங்க... இந்த நாலு பேர்ல ரெண்டு பேர், போன அ.தி.மு.க., ஆட்சியில் அக்கட்சியினருடன் கூட்டணி போட்டு அடாவடி செய்தாங்க பா...
''மின் வாரியத்தில், 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' வுல போலி சான்றிதழ் குடுத்து பணியில சேர்ந்தவங்க பற்றிய விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டதும் இவங்க தான்... இவங்க அடாவடி நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போறதால, இவங்களை பத்தி தி.மு.க., தலைமைக்கு நிறைய ஊழியர்கள் புகார் அனுப்பி யிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''திருட்டுத்தனமா, 'சரக்கு' வித்தவரை பாய்ந்து பிடிச்சா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''லோக்சபா தேர்தல் நடந்ததால, தமிழகத்துல போன 17 முதல் 19ம் தேதி வரை, மூணு நாள் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடினாளோல்லியோ... என்னதான் கடைகளை மூடிட்டாலும், கள்ள சந்தையில தாராளமா சரக்கு விற்பனை நடந்துது ஓய்...
''செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில், ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்குன்னு, தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைச்சது... உடனே ஸ்டேஷன் அதிகாரி, தனிப்பிரிவு காவலர் உள்ளிட்ட போலீசார், அந்த வீட்டுல அதிரடி சோதனை நடத்தி, 150க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தா...
''ஆனா, கேஸ் ஏதும் போடாம, அங்க இருந்தவரிடம் பேரம் பேசி, சில ஆயிரங்களை கறந்துட்டு சத்தமில்லாம திரும்பி போயிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''புகழ், ஜெகன் வர்றாவ... உட்கார கொஞ்சம் இடம் குடுங்க...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''வெயில் கொளுத்துறதால, 'ஏசி, ஏர்கூலர்'களை வாங்கிட்டு இருக்காவ வே...'' என்றார்.
''இந்த சீசன்ல இது சகஜம் தானே பா...'' என்றார், அன்வர்பாய்.
''முழுசா கேளும்... தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., - பா.ம.க., - அ.தி.மு.க., இடையே மும்முனை போட்டி நடந்துச்சுல்லா... மூணு கட்சிகள் சார்புலயும், வாக்காளர்களுக்கு கடைசி நேர பணப் பட்டுவாடா ஜோரா நடந்துச்சு வே...
''ஆனா, சில இடங்கள்ல இந்த மூணு கட்சிகளின் நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சியினரும், பெயரளவுக்கு பணத்தை குடுத்துட்டு, மீத தொகையை அமுக்கிட்டாவ... இப்ப, தேர்தல் முடிஞ்சிட்டதால அந்த பணத்துல பலரும், 'ஏசி, ஏர்கூலர்'களை வாங்கிட்டு இருக்காவ...
''தர்மபுரி ஏரியாவுல இந்த பொருட்களை நிறைய அரசியல் கட்சி நிர்வாகிகள் வாங்கிட்டு போறதை பார்க்க முடியுது வே...'' என்றார், அண்ணாச்சி.
''அவா நல்லா குளுகுளுன்னு படுத்து துாங்குவா... பணம் கொடுத்த வேட்பாளர்களுக்கு தான் பாவம், வயிறு குமுட்டி அடுப்பு மாதிரி எரியும் ஓய்...'' என சிரித்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

