PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM

ஏப்ரல் 5, 1933
மலேஷியாவில் பணிபுரிந்த, இலங்கை தமிழர் இளையதம்பி கனகசபாபதி - தில்லைநாயகி தம்பதிக்கு மகனாக, 1933ல் இதே நாளில் பிறந்தவர் க.கைலாசபதி.
இவர், கோலாலம்பூரில் படித்தார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் இலங்கை வந்த இவர், யாழ்ப்பாணம் ஹிந்து கல்லுாரி, கொழும்பு ராயல் கல்லுாரிகளில் படித்தார். கொழும்புவில் வெளியான, 'தினகரன்' நாளிதழில் உதவி ஆசிரியராக சேர்ந்து, ஆசிரியரானார்.
பிரிட்டனின் பர்மிங்ஹாம் பல்கலையில், ஜார்ஜ் தாம்சன் தலைமையில் பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவரது ஆய்வு நுாலை ஆக்ஸ்போர்டு பதிப்பகம் நுாலாக வெளியிட்டது. யாழ்ப்பாண பல்கலை உருவானபோது அதன் தலைவராகி, அதன் வளர்ச்சிக்கு உதவினார்.
உலகின் புகழ் பெற்ற பல்கலைகளில் வருகை பேராசிரியராக பணியாற்றிய இவர், 'அடியும் முடியும், பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும், தமிழ் நாவல் இலக்கியம்' உள்ளிட்ட பல நுால்களை எழுதினார். 1982, டிசம்பர் 6ல் தன், 49வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

