/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இறங்க, இறங்க, 'சுதி' ஏற்றிக்கொள்ளும் அதிகாரி!
/
இறங்க, இறங்க, 'சுதி' ஏற்றிக்கொள்ளும் அதிகாரி!
PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

''ஆளுங்கட்சி பிரமுகரிடம் ஜம்பம் பலிக்கலைங்க...'' என, இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டத்தில், 191 டாஸ்மாக் கடைகள் இருக்குது... புதுசா வந்த மாவட்ட மேலாளர் தனஞ்செயன், அடிக்கடி கடைகளை ஆய்வு செய்றாருங்க... பல கடைகள்ல வேலை பார்த்துட்டு இருந்த வெளி நபர்களை அதிரடியா விரட்டி அடிச்சாருங்க...
''சில கடைகள்ல மது விற்பனைக்கும், சரக்கு இருப்புக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்ததை கண்டுபிடிச்சு, அதை சரி பண்ணும்படி ஊழியர்களை எச்சரிக்கை செஞ்சாருங்க... ஓமலுார் பக்கத்துல ஒரு கடையில மட்டும், 19 லட்சம் ரூபாய் வித்தியாசம் வந்திருக்கு... இவரும், கடையில நள்ளிரவு வரை உட்கார்ந்து, ஊழியர்கள் கணக்கை சரி செய்த பிறகு தான் கிளம்பினாருங்க...
''அதே நேரம், வெள்ளக்கல்பட்டி கடையில மட்டும் இவரால கணக்குகளை சரி பண்ணவே முடியல... ஏன்னா, அங்க இருக்கிறவர் ஆளுங்கட்சி தொழிற்சங்க பிரமுகர்... அவர்கிட்ட, மேலாளரின் பாச்சா பலிக்கலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஜம்பு, இங்கன உட்காரும்...'' என, நண்பரை வரவேற்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''விவசாயிகள் நலனை யாருமே கண்டுக்கிறது இல்ல வே...'' என்றபடியே தொடர்ந்தார்...
''வேளாண்மை துறையில, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' என்ற பெயர்ல, புதிய திட்டத்தை மாநில அரசு அறிவிச்சது... இதன்படி, உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பதவிகளின் பெயர்கள் மாற்றப்படும்னு அறிவிச்சாவ வே...
''இவங்களுக்கு மூன்று முதல் நான்கு ஊராட்சிகளை உள்ளடக்கி, 1,200 ஏக்கர் விவசாய பரப்பு ஒதுக்கப்படும்... அந்த நிலங்கள்ல பயிர் சாகுபடி, விவசாயிகளுக்கான ஆலோசனை, தொழில்நுட்ப பயிற்சி, பயிர் வளர்ச்சிக்குரிய முழு பொறுப்பையும் அந்த அலுவலர் தான் ஏற்கணும்னு சொல்லியிருந்தாவ வே...
''ஆனா, இந்த திட்டத்துக்கு நிதித் துறை ஒப்புதல் தர மறுத்துட்டதா சொல்லுதாவ... இதனால, திட்டம் செயல்பாட்டுக்கே வந்த மாதிரி தெரியல வே...'' என்றார், அண்ணாச்சி.
''மப்புலயே மிதக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் பத்திரப்பதிவு ஆபீஸ்ல இருக்கற அதிகாரியை தான் சொல்றேன்... பேருக்கு ஏத்தாப்ல கார்த்தால ஆபீஸ் வர்ரச்சயே, 'சுதி' ஏத்திண்டு தான் வரார்... அதுவும் இல்லாம, இறங்க, இறங்க ஏத்திண்டே இருப்பார் ஓய்...
''இதனால, பதிவு பணிகள் எல்லாம் சுணக்கமா நடக்காது... என்னதான் மப்புல இருந்தாலும், பத்திர எழுத்தர்கள் வழியா, கமிஷனை கச்சிதமா வசூல் பண்ணிடறார் ஓய்...
''மதியம் சரக்கு, மட்டன் விருந்தை எல்லாம் பத்திர எழுத்தர்களே ஏற்பாடு பண்ணிடறா... இதனால, இங்க போலி பத்திரப்பதிவுகள் அதிகமா நடக்கறது ஓய்...
''சமீபத்துல, கரடிகுளத்தை சேர்ந்த நடராஜன் என்ற விவசாயி, தன் குடும்ப சொத்துக்களை பாகம் பிரிக்க கார்த்தால 10:00 மணிக்கு வந்தவர், சாயந்தரம் 5:00 மணி வரை காத்து கிடந்திருக்கார்... பொழுது சாயறச்சே புல் மப்புல இருந்த அதிகாரி,பத்திரத்தை வாங்கி கூட பார்க்காம, 'பத்திரத்துல தவறு இருக்கு... வெளியில போங்க'ன்னு சொல்ல, நடராஜன் கடுப்பாகி வாக்குவாதம் பண்ணியிருக்கார்... அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி அழைச்சுண்டு போனா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.

